புலிகள் இயக்கத்துடன் தொடர்பு: அறுவர் மீதான வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்

கோலாலம்பூர் –

தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குப் புத்துயிரூட்டுவதற்கு முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட மலாக்கா அரசு சார்பு நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி எஸ்.சந்துரு, தொழில் நுட்பாளர் எஸ். அறிவேந்தன், ஸ்டோர் கீப்பர் எஸ். தனகராஜ், பாதுகாவலர் எம். பூமுகன், பள்ளி ஆசிரியர் சுந்தரம் ரெங்கன் என்ற ரெங்கசாமி, டாக்சி ஓட்டுநர் வி. பாலமுருகன் ஆகிய அறுவர் மீதான வழக்கு விசா ரணையை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றும் அரசு தரப்பின் கோரிக்கையை செஷன்ஸ் நீதிமன்றம் அனுமதித்தது.

நேற்று முன்தினம் இந்த வழக்கு மறுசெவிமடுப்புக்கு வந்தபோது அரசு தரப்பு வழக்கறிஞர் டிபிபி முகமட் பிரடவுஸ் அபு ஹனிபா கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து இந்த வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றும் முடிவை நீதிபதி அசுரா அல்வி தெரிவித்தார்.

இந்த வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு குற்ற விசாரணை முறை சட்டத்தின் 177 அ (1) பிரிவை அரசு தரப்பு சார்ந்திருப்பதாகவும் பிரடவுஸ் கூறினார். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களான ராம்கர்ப்பால் சிங், ஆர். டி . ராஜசேகரன், ஷாபிக்கா சோபியான் மற்றும் மெத்தியுஸ் ஜூட் ஆகியோர் இந்த வழக்கை மாற்றும் அரசு தரப்பின் விண்ணப்பத்தை ஆட்சேபிக்கவில்லை.

தமிழரசன் சிவம், அறிவேந்தன் சுப்ரமணியம், பூமுகன் தமிழன், சந்துரு சுப்ரமணியம் மற்றும் ஈழிலன் என்ற முகநூல் கணக்கில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு வழங்கியதாகவும் கூறப்பட்டது, அந்த அறுவரும் உயர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஜாமீன் கோரி விண்ணப்பிக்க முடியும் என்றும் அசுரா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here