‘அறிவாற்றல் வளர்ச்சி என்பது பிறப்பில் தொடங்கி இறப்பில் முற்றுப்பெற வேண்டும்’– ஆல்பெர்ட் ஐன்ஸ்டெய்ன்.
மலேசிய கல்வி அமைச்சின் வாழ்நாள் கல்வி (PEMBELAJARAN SEPANJANG HAYAT) இதன் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.
வாழ்நாள் கல்வி என்பது வெறும் ஏட்டுப்படிப்பு அல்ல. ஒரு தனிமனிதனின் உற்பத்தித் திறனில் முழு கவனம் செலுத்துவதாக உள்ளது. இதில் நிபுணத்துவக் கல்வி தவிர்க்கப்படுகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிக்கக்கூடிய ஓர் உழைப்பை இந்த வாழ்நாள் கல்வி வலியுறுத்துகிறது.
நாட்டு மக்கள் தொகையில் 15 முதல் 64 வயதிற்குட்பட்டவர்கள் உற்பத்தித் திறனின் முதுகெலும்பாக இருக்கின்றனர். 64 வயதிற்கு மேற்பட்டவர்களும் பொருளாதார வளர்ச்சியில் அதீதப் பங்களிப்பையும் வழங்குகின்றனர் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நகர்வும் படிப்பினையும் கல்விதான். வாழ்க்கைச் சுழற்சியில் ஏற்படக்கூடிய அனுபவங்களும் ஒரு படிப்புதான்.
ஏட்டுக்கல்வி ஒருவரின் அறிவுப்பசிக்குத் தீனியாகிறது. ஆனால், இதற்கு அப்பாற்பட்ட முறையில் கல்வியில் நாட்டம் இல்லாதவர்கள் சொந்த முயற்சி, கைத்தொழில் என்று இறுதிமூச்சு வரை ஏதாவது ஒரு வகையில் சுழன்றுகொண்டுதான் இருக்கின்றனர்.
இவர்கள் போன்றோரின் அறிவுத்திறன் செயல் திறனோடு கலக்கும்போது அவர்களின் வாழ்க்கை மேன்மைக்கு வழிபிறக்கிறது. கல்விக்கு வயது வரம்பு கிடையாது. இடம் மற்றும் கல்விப் பின்னணி போன்றவை எல்லைக் கடந்தவை. ஏட்டுப் படிப்பில் நாட்டம் இல்லாதவனிடம் மற்ற திறமைகள் புதைந்து கிடக்கும்.
இந்தத் திறமைப் புதையல்களை வெளிக்கொணர்ந்து அவனுக்கு உரிய பயிற்சிகள் வழங்கி வாழ்க்கையில் உயரும் வழிகள் காட்டப்பட வேண்டும். அதேநேரத்தில் நாட்டின் பொருளாதார வளப்பமும் வலுபெற வேண்டும் என்பதுதான் மலேசிய கல்வி அமைச்சின் வாழ்நாள் கல்வித் திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.
மலேசிய மக்கள் உருமாற்றத் திட்டத்தின் கீழ் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் குறிப்பாக மலேசிய கல்வி அமைச்சு ஒருவரின் அறிவாற்றலையும் உயர் திறன்களையும் அடையாளம் கண்டு பட்டைத் தீட்டுவதும் அதிமுக்கிய நடவடிக்கையாக முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.
வாழ்நாள் கல்வித் திட்டத்தைத் தேசிய அளவில் அமல்படுத்துவதிலும் மலேசிய கல்வி அமைச்சு அதீத கவனம் செலுத்தி வருகிறது. இம்முயற்சிகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி மிகப்பெரிய அளவிலான பலன்களை அளிப்பதையும் கல்வி அமைச்சு உறுதிசெய்து வருகிறது. மலேசிய கல்வி அமைச்சின் இந்த உன்னதத் திட்டத்தில் 14 முக்கிய அமைச்சுகள், அரசாங்க ஏஜென்சிகள், அரசு சாரா (என்ஜிஓ) பிரதிநிதிகள், தொழில்துறை பேராளர்கள் மற்றும் இதர முக்கிய துறையினரின் பிரதிநிதிகளும் இடம்பெற்றுள்ளனர்.
வாழ்நாள் கல்வி செயற்குழுவுக்கு மலேசிய கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் தலைமையேற்றுள்ளார். கல்வி அமைச்சின் தலைமைச் செயலாளர் வாழ்நாள் கல்வி தொழில்நுட்ப செயற்குழுவுக்குத் தலைமை வகிக்கிறார். வாழ்நாள் கல்வித் திட்டங்கள் மிகவும் ஆக்கப்பூர்வமான வகைகளில் அமல்படுத்தப்படுவதையும் கண்காணிப்பதையும் இவ்விரண்டு செயற்குழுக்களும் உறுதிசெய்யும். எல்லாத் திட்டங்களையும் இவ்விரண்டும் ஒருங்கிணைக்கும்.
2020க்குள் நாட்டின் மக்கள் தொகை 3 கோடியே 42 லட்சமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் 15க்கும் 64க்கும் இடைப்பட்ட வயதினர் 2 கோடியே 62 லட்சம் பேர். இவர்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் நாட்டுக்குத் தேவையான மனிதவளத்தைத் தரக்கூடியவர்களாக இருப்பர்.
ஆனால், இவர்களின் ஆக்கத்திறன் என்று பார்த்தால் மிக மிக குறைவானவர்கள் அதில் இடம்பெறுவர். இவர்களுக்கு உரிய பயிற்சியை வழங்கி உயர் திறன் மிக்கவர்களாக மாற்றத் தவறினால் தரம் மிக்க மனித ஆற்றல் முடங்கிப்போகும்.
வாழ்நாள் கல்வித் திட்டத்தின் கீழ் மலேசிய கல்வி அமைச்சு இந்த மனித சக்திகளைப் பட்டைத் தீட்டும் முயற்சிக்கான திட்டங்களை வகுத்து முன்னெடுத்திருக்கிறது.
69 லட்சம் பேர் பங்கேற்பு
2017 முதல் 2019 ஆகஸ்டு வரை வாழ்நாள் கல்வித் திட்டங்களில் 69 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். மூன்று அமைச்சுகள் இதில் பெரும் பங்காற்றியுள்ளன. மனிதவள அமைச்சு (KSM) திட்டங்களில் 29 லட்சத்து 14 ஆயிரத்து 424 பேரும் மலேசிய சீகாதார அமைச்சின் (KKM) பயிற்சிகளில் 9 லட்சத்து 30 ஆயிரத்து 240 பேரும் மலேசிய கல்வி அமைச்சின் (KPM) திட்டங்களில் 9 லட்சத்து 868 பேரும் பங்கேற்றனர்.
இப்பயிற்சிகளில் பங்கெடுத்ததன் மூலம் அறிவாற்றலோடு, தொழில் திறன்களையும் கற்றுத் தேர்ந்தனர். இது அந்நியத் தொழிலாளர்களைச் சார்ந்திருக்கும் போக்குத் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இதுவே இந்த வாழ்நாள் கல்வியின் அடிப்படை நோக்கமாக விளங்குகிறது.
ஒருவரின் அறிவாற்றல், திறன், போட்டித்திறமை ஆகியவற்றைப் பட்டைத்தீட்டி உத்வேகத்தைத் தரக்கூடிய ஒரு களமாகவும் வாழ்நாள் கல்வித் திட்டம் அமைகிறது.
அரசாங்க லட்சியத்தின் ஊற்றுக்கண்
ஒட்டுமொத்தத்தில் நாட்டின் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற மலேசிய அரசாங்கத்தின் நோக்கத்தையும் லட்சியத்தையும் மறைமுகமாக ஆதரிக்கும் ஒரு களமாகவும் வாழ்நாள் கல்வித் திட்டம் விளங்குகிறது என்றால் மிகையாகாது.
ஆரம்பக் கல்வி தொடங்கி உயர்கல்வி வரையில் கல்வித்திட்டம் மேம்படுத்தப்பட வேண்டும். இதில் தொழில்பயிற்சி கல்வியும் உள்ளடங்க வேண்டும் என்ற லட்சியத்தை மலேசிய அரசாங்கம் கொண்டுள்ளது.
இந்த உன்னத நோக்கத்தில் அரசாங்கம் உண்மையாக இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் நாட்டின் 2020 பட்ஜெட்டிற்கு ‘கூட்டு சுபிட்சத்தை நோக்கி சமச்சீரான வளர்ச்சியின் நன்மைகள்’ என்ற கருப்பொருள் சுட்டப்பட்டது.
நான்கு கட்டமைப்புகள்
இதில் நான்கு முக்கிய கட்டமைப்புகள் அதன் முதுகெலும்பாக முன்வைக்கப்பட்டன.
முதலாவது: புதிய பொருளாதார மற்றும் டிஜிட்டில் சகாப்தத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு உந்துதல் சக்தியைக் கொடுப்பது.
இரண்டாவது: மக்கள் மீது முதலீடு செய்வது.
மூன்றாவது: சமச்சீரான, பிரத்தியேகமான, ஐக்கியப்பட்ட மலேசிய சமுதாயத்தை உருவாக்குதல்.
நான்காவது: பொதுமக்களின் நிதி வலிமையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவது.
இதன் அடிப்படையில் நகர் வாழ் மக்கள், புறநகர் வாழ் மக்கள் இடையிலான இடைவெளியைப் போக்கி, இனங்களுக்கிடையில் ஏழை – பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வை நீக்கி, ஏற்றத் தாழ்வுகளைப் போக்கி ஏழமையைக் குறைக்கும் ஓர் உன்னத முதலீடுதான் இந்த வாழ்நாள் கல்வித் திட்டம் என்று அரசாங்கம் கருதுகிறது.
இந்த வாழ்நாள் கல்வித் திட்டத்தின் தொடர் வெற்றி இதனை நிரூபிக்கிறது. மிகப்பெரிய அர்த்தத்தையும் இத்திட்டம் பதிவு செய்து வருகின்றது.
வளமான வருமானம் – வளமான வாழ்க்கை
மூத்தப் பிரஜைகள், உடற்பேறு குறைந்தவர்கள், இளைஞர்கள், முதிர் மாணவர்கள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற மகளிர் இந்த வாழ்நாள் கல்வித் திட்டத்தில் பங்குபெற்று அவர்களின் பொருளாதார அந்தஸ்தையும் உயர்த்திக் கொண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பைச் செய்து வருகின்றனர். இவர்களின் உழைப்பின் மூலம் கிடைக்கப் பெறும் வருமானத்தில் ஒரு குடும்பமே நல்வாழ்க்கை வாழ்கிறது.
உடற்பேறு குறைந்த ஒருவர் இத்திட்டத்தின் கீழ் தொழிற்கல்வி கற்று மாதம் ஒன்றுக்கு மிகப்பெரிய வருமானத்தைச் சம்பாதிப்பதை இத்திட்டம் உறுதி செய்திருக்கிறது.
நம்மால் குடும்பத்திற்கும் நாட்டிற்கும் எந்தப் பயனும் இல்லை என்று படுத்தப் படுக்கையாகக் கிடந்தவர்கள்கூட இன்று மாதம் ஒன்றுக்கு 10,000 வெள்ளி வரை சம்பாதிக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றனர்.
உடற்பேறு குறைந்தவர்களுக்கு சிறப்பு மானியம்
உடற்பேறு குறைந்தவர்களைக் கைதூக்கிவிட அரசாங்கம் சிறப்பு மானியங்களைக் கொண்டிருக்கிறது. வாழ்நாள் கல்வித் திட்டங்களின் வழி இது சாத்தியமாகிறது.
வயதாகி விட்டவர்களின் நிபுணத்துவமும் அனுபவங்களும் வீண் போகாமல் வாழ்நாள் கல்வித் திட்டம் உறுதி செய்கிறது. அவர்களிடம் உள்ள திறன்கள் – ஆளுமைகள் நன்கு பயன்படும் வகையில் வாழ்நாள் கல்வித் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.
தொழில்நுட்பம், அனுபவம், திறன்கள் ஆகியவை மற்றவர்களுக்குப் போதிக்கப்படுவதில் – கற்றுத் தரப்படுவதில் இந்த முதிர் கல்வியாளர்கள் சேவைகள் பயன்படுத்தப்படுகின்றன. சமையல் கலைஞர் ஒருவர் ஓர் உணவகம் வைத்து நடத்தும் அளவுக்கு வழிகாட்டப்படுகிறது. குடும்ப மாதர்கள் வீட்டில் இருந்துகொண்டே ஆன் லைன் மூலம் பெரும் சம்பாத்தியத்தை ஈட்டுவதற்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இவை யாவற்றையும் கல்வி அமைச்சின் வாழ்நாள் கல்வித் திட்டம் சாத்தியமாக்கி வருகிறது.
டிஜிட்டல் பொருளாதாரம் தலையெடுத்திருப்பதைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்பம், பல்லூடகம், இன்டர்நெட் போன்ற துறைகளில் நாட்டிற்கு ‘மூளைக்காரர்கள்’ தேவைப்படுகின்றனர். இதற்கும் உச்சக்கட்ட வழிகாட்டலையும் ஆக்கத்தையும் ஊக்கத்தையும் மலேசிய கல்வி அமைச்சின் வாழ்நாள் கல்வித்திட்டம் வழங்குகிறது.
தொழில்புரட்சி 4.0
தொழில்புரட்சி 4.0 – இந்த உலகப் புரட்சி அலைகளில் இருந்து நம் நாடு தப்பிக்க முடியாது. இதனை ஆக்கப்பூர்வமாகவும் அறிவுப்பூர்வமாகவும் எதிர்கொள்வதற்கு நாம் தயாராக வேண்டும். இதற்கு மாணவர் சமூகமும் தொழிலாளர் வர்க்கமும் ஒன்றிணைய வேண்டும். படித்துக்கொண்டோ, வேலை செய்துகொண்டோ தொடர்ந்து படித்துகொண்டே இருக்க வேண்டும். தொழில்புரட்சி 4.0-ஐ எதிர்கொள்வதற்கு வாழ்நாள் கல்வி அத்தியாவசியமாகிறது.
இதுதான் இன்றைய நவநாகரிக காலத்தில் நாம் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் நிறைந்த மாற்றங்கள். டிஜிட்டல் பொருளாதார சகாப்தத்தில் இச்சவால்களை எல்லாம் சமாளிப்பதற்கு இந்த வாழ்நாள் கல்வித் திட்டம் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிக மிக அத்தியாவசியமாகிறது.
இன்டர்நெட் கைகொடுக்கிறது
இந்தச் சவால்கள்மிக்க காலத்தில் நாம் எங்கிருந்து தகவல்களைப் பெறுவது? இன்டர்நெட் நமக்கு உற்றதுணையாக இருக்கிறது. அவற்றின் உதவியோடு தகவல்களை விரல் நுனியில் கொண்டிருக்கலாம். மின்னியல் – சைபர் உலகில் தகவல்களை இருந்த இடத்தில் இருந்துகொண்டே தெரிந்துகொள்ளலாம். இதற்கு நேரம், காலம், இடம் அவசியம் இல்லை.
கல்வி அமைச்சின் வாழ்நாள் கல்வித் திட்டங்களையும் இன்டர்நெட் மூலம் நாட்டு மக்களின் அனைத்துத் தரப்பினரும் தெரிந்துகொள்ளலாம். ஒருவரின் நன்நடத்தையும் ஆரோக்கியமான சிந்தனைகளும் வாய்ப்புகளைப் பற்றிக்கொண்டு வாழ்க்கையில் உயரும் வழிவகைகளைத் தெரிந்துகொண்டு கரைசேரும் பக்குவத்தைத் தருகிறது.
அறிவுக் கலாச்சாரம் ஒருவரின் பழக்கவழக்கங்களையும் நன்நடத்தையையும் உறுதிசெய்கிறது. இதன் அடிப்படையில் சமுதாயத்தின் ஓர் அங்கமாக இருக்கும் ஒவ்வொருவரும் தங்களுக்காக மட்டுமன்றி நாட்டிற்கும் சேர்த்து மிகப்பெரிய பங்களிப்பை வழங்குவதற்குரிய வழிகாட்டல்களை இந்த வாழ்நாள் கல்வித் திட்டம் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது.
வாணிகம், விவசாயம், தொழில்துறை என்று எல்லாத் துறைகளுமே வாழ்நாள் கல்விதான். கல்வி அமைச்சின் வாழ் நாள் கல்வித் திட்டங்களில் ஒரே முகப்பிடமாக விளங்கும் ‘Portal Nasional PSH’ போர்ட்டலையும் கல்வி அமைச்சு அறிமுகம் செய்திருக்கிறது. தகவல்களைப் பெற்று நன்மை அடைவதற்கு இது பொதுமக்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும். வாழ்நாள் கல்வித் திட்டத்தில் இடம்பெற்றுள்ள துறைகள் வருமாறு:
1. மொழி
2. கிராஃபிக் – மல்டிமீடியா
3. உபசரணை – சுற்றுலா
4. தையல் – ஆடைத் தயாரிப்பு
5. கேட்டரிங் – உணவுத் தயாரிப்பு
6. அழகு கலை – சிகை அலங்காரம்
7. வாகனம் பழுதுபார்த்தல்
8. உடல் ஆரோக்கியம்
9. கம்ப்யூட்டர் – தகவல் தொழில்நுட்பம்
10. சுயமேம்பாடு – தன்னூக்கம்
11. வணிகம் – தொழில்முனைவர்
12. கலை – கைவினை
யார் யாருக்கு நன்மை?
தனித்து வாழும் தாய்மார்கள், வறிய ஏழ்மையில் உள்ளவர்கள், மூத்தப் பிரஜைகள், இளைஞர்கள், உடற்பேறு குறைந்தவர்கள், நிபுணத்துவம் நிறைந்தவர்கள்.
இத்துறைகளில் 2014 – 2019 வரை 45,257 பேர் பங்கேற்றனர். 2019இல் மொத்தப் பயிற்சிகள் 356. 2019இல் நவம்பர் 22 வரை பங்கேற்றவர்கள் 6,742 பேர். இவர்களுள் ஆண்கள் 2,425, பெண்கள் 4,317 பேர். இப்பயிற்சிகள் வழி தொழில்முனைவர்களாக உருவாகியிருப்பவர்கள் 70 பேர். மலேசிய கல்வி அமைச்சின் வாழ்நாள் கல்வித் திட்டம் ஏழைகளின் சொர்க்கம்!