ஜாகர்த்தா –
இந்தோனேசியாவின் தலைநகர் ஜாகர்த்தாவில் கனத்த மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்திலும் நிலச்சரிவுகளிலும் சிக்கி இருபத்தோரு பேர் மரணமடைந்துள்ளனர். வெள்ளத்தால் மேலும் முப்பதாயிரம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
அந்த பெருநகரின் சில பகுதிகளில் ரயில்சேவை நிலைகுத்தியுள்ளதோடு மின்சாரத் தடையும் ஏற்பட்டுள்ளது. ஜாகர்த்தாவின் பெரும் பகுதிகளிலும் அண்டையில் உள்ள இதர நகர்களிலும் டிசம்பர் முப்பத்தோராம் தேதி தொடங்கி இரண்டு நாட்களுக்கு கனத்த மழை பெய்தது. அதனைத் தொடர்ந்து அப்பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
வெள்ளத்திலும் நிலச்சரிவுகளிலும் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை வியாழக்கிழமை மாலை நிலவரப்படி இருபத்தோரு பேரை எட்டியுள்ளது என்று சமூக விவகார அமைச்சின் பேச்சாளர் ஜோக்கோ ஹரியாந்தோ குறிப்பிட்டார். சில இடங்களில் இன்னும் மழை பெய்து கொண்டிருக்கிறது. மின்னல் வெட்டும் அதிகம் காணப்படுகிறது. அத்துடன் பலத்த காற்றும் வீசிக் கொண்டிருக்கிறது என்று அவர் சொன்னார்.
சம்பந்தப்பட்ட நபர்கள் எந்த சூழ்நிலைகளில் உயிரிழந்தனர் என்பது பற்றிய விரிவான விளக்கத்தை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை. நால்வர் மூழ்கியும் இதர நால்வர் நிலச்சரிவுகளில் சிக்கியும் மாண்டதாகவும் மேலும் மின்சாரம் தாக்கியும் உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் இதற்கு முன்னர் தெரிவித்தனர். அவர்களைத் தவிர்த்து மேலும் மூவர் வெப்பம் தொடர்பான உடல் நலிவுக்கு ஆளாகி இறந்துள்ளனர் என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
ஜாகர்த்தாவிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மூன்று கோடிக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.