தனி நபர் இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை;பிரித்தானிய சுகாதார அமைச்சர் பதவி விலகினார்

பிரித்தானியா, (ஜூன் 27):

பிரித்தானியாவில் அண்மையில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் இருந்து வந்தாலும், சமூக இடைவெளியை உறுதி செய்யும் வகையில் பொது இடங்களில் கை குலுக்குதல், கட்டித்தழுவுதல் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பிரித்தானிய சுகாதார அமைச்சர் மாட் ஹான்க் கொரோனா சமூக இடைவெளி விதிமுறைகளை மீறி தனது அலுவலகத்தில் வைத்து பெண் உதவியாளரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சமூக இடைவெளி விதிமுறைகள் அமலில் இருந்த சமயத்தில் மாட் ஹான்க் தனது உதவியாளருக்கு முத்தம் கொடுத்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான நிலையில், அந்த நாட்டின் பிரபல தினசரி பத்திரிகை ஒன்று இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டது.

இதனை தொடர்ந்து சுகாதார அமைச்சர் மாட் ஹான்க் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, பிரதமர் பொரிஸ் ஜோன்சனிடம் இது தொடர்பாக மன்னிப்பும் கோரினார். இதையடுத்து மாட் ஹான்க்கின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதாகவும், இந்த பிரச்சினை முடிந்து விட்டதாகவும் போரிஸ் ஜான்சன் அறிவித்தார்.

எனினும் இந்த விவகாரத்தில் சுகாதார அமைச்சர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தல் காரணமாக சுகாதார மந்திரி மாட் ஹான்க் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here