லண்டன் –
ஸ்பெய்ன், பார்சிலோனா, இத்தாலி இன்டர் மிலான் ஆகிய முன்னணி கால்பந்துக் குழுக்கள் பயர் எமெரிக் ஒபமெயாங்கை கவ்விச் செல்ல கண்கொத்திப் பாம்பாக கவனித்துவரும் வேளையில் அவர் எங்கேயும் செல்லப்போவதில்லை என்று கூறி அர்செனல் குழு ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியை வழங்கியுள்ளார் என்று அதன் நிர்வாகி மிக்கெல் அர்டேட்டா கூறினார்.
பிரான்சில் பிறந்தாலும் அனைத்துலகப் போட்டிகளில் கபோன் நாட்டைப் பிரதிநிதித்து வருகிறார் 30 வயதான ஒபமெயாங். ஜெர்மனியின் டோர்ட்மண்ட் குழுவில் இருந்து கடந்த 2018ஆம் ஆண்டில் அர்செனலுக்கு மாறிய இவர், அக்குழுவின் முன்னணி தாக்குதல் ஆட்டக்காரராகத் திகழ்ந்து வருகிறார்.
ஆயினும், 2017ஆம் ஆண்டில் எஃப்.ஏ. கிண்ணத்தைக் கைப்பற்றிய பிறகு அர்செனல் குழு எந்தக் கிண்ணத்தையும் வென்றதில்லை. அத்துடன், தொடர்ந்து 17 பருவங்களாக சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடிய அக்குழு, கடந்த மூன்று பருவங்களாக அந்த வாய்ப்பையும் இழந்துவிட்டது.
தற்போது நடப்பு இங்கிலீஷ் பிரிமியர் லீக்கில் படுமோசமாக விளையாடி வந்ததால் பொறுமை இழந்த ஒபமெயாங், அர்செனலுடனான ஒப்பந்தம் இன்னும் 18 மாதகாலம் இருந்தபோதும் அக்குழுவைவிட்டு விலகத் தீர்மானித்ததாகப் பேச்சு அடிபட்டது.
இந்த நிலையில்தான் அர்செனலின் புதிய நிர்வாகியாகப் பொறுப்பேற்றார் அதன் முன்னாள் ஆட்டக்காரர் மிக்கெல் அர்டேட்டா. அவர் வந்த பிறகு குழுவின் செயல்பாடு மேம்பட்டுள்ளதால் ஒபமெயாங் தமது எண்ணத்தை மாற்றிக்கொண்டு அர்செனல் குழுவிலேயே நீடிக்க முடிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நான் 100% அர்செனல் ஆட்டக்காரர்தான் என்று பிரான்ஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இவர் சொன்னார். அதேபோல, இவரில்லாத அர்செனலைத்தான் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று அர்டேட்டாவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் நடந்த மிக முக்கியமான ஆட்டத்தில் அர்செனல் 2-0 என்ற கோல்கணக்கில் மென் செஸ்டர் யுனைடெட்டை வீழ்த்தியது. இந்த வெற்றிக்குப் பின்னர் அர்செனல் வீரர்களிடையே பெரும் உற்சாகம் பிறந்துள்ளது.
நட்சத்திர ஆட்டக்காரர்களான ஓசில், ஒபமெயாங், ஷக்கா, லாகாஸெட்டி, பெப்பே ஆகியோர் அடங்கிய கூட்டணி இப்போது கலக்கிக் கொண்டிருக்கிறது.