பெட்டாலிங் ஜெயா –
நாடு முழுவதும் இவ்வாண்டு டோல் கட்டண அதிகரிப்பு இல்லை. அதனை முடக்கி வைக்கும் முடிவில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.
டோல் கட்டண அதிகரிப்பு மக்களுக்குப் பெரும் சுமையாகிவிடும் என்பதால் அரசாங்கம் இம்முடிவில் எவ்வித மாற்றத்தையும் செய்ய விரும்பவில்லை என்று அவர் சொன்னார். டோல் சாவடிகளை நிர்வகித்து வரும் நிறுவனங்களுக்கு அரசாங்கம் ஒரு கோடி வெள்ளியை இழப்பீடாக வழங்க வேண்டியிருக்கிறது. ஆனாலும் மக்களின் வாழ்க்கைச் செலவை அதிகரிக்க கூடாது என்ற முடிவிலும் முயற்சியிலும் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது என அவர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு டோல் கட்டண அதிகரிப்பை அரசாங்கம் முடக்கியுள்ளது என்ற போதிலும் அதற்கு ஈடான இழப்பீட்டை அரசாங்கம் வழங்க வேண்டியிருக்கிறது என்பதை மக்கள் தெரிந்து புரிந்துகொள்ள வேண்டும். டோல் கட்டண அதிகரிப்பு இல்லாத நிலையில் அரசாங்கம் இதைச் செய்ய வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்படுகிறது என்பதை குவான் எங் சுட்டிக்காட்டினார்.
இங்கு கிளானா ஜெயா கூட்டரசுப் பிரதேச சுங்கத்துறைத் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற வாடிக்கையாளர் சந்திப்பு தினத்தில் கலந்துகொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
இழப்பீட்டுத் தொகை என்பது மிகச் சிறிய தொகையல்ல. கண்டிப்பாக அது மிகப்பெரியதுதான் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் மற்ற விவகாரங்களில் காட்டப்படும் அக்கறையும் செய்தி சேகரிப்பும் இவ்விவகாரத்தில் காட்டப்படாதது வருத்தம் அளிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
நாடு முழுமையிலும் உள்ள 21 டோல் நிறுவனங்களின் டோல் கட்டண அதிகரிப்பை 2019இல் அரசாங்கம் முடக்கியது.
இதனைத் தகவல் ஊடகங்கள் பெரிதுபடுத்தி பரவலான செய்தித் தகவலை மக்களுக்குத் தரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். மக்களின் சுமையைக் குறைப்பதற்கு அனைத்துவிதமான வாகனங்களுக்குமான டோல் கட்டணங்கள் அதிகரிப்பை அரசாங்கம் முடக்கியது.