கல்வி அமைச்சு வெளியிட்ட கடிதம்
கோலாலம்பூர் –
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள ஒரு கடிதத்தில் பொங்கல் விழா சமய விழா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இது உண்மையில் ஒரு கலாச்சார விழா என்று சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
எனினும் பள்ளிக்கூடங்களில் பொங்கல் விழாவை நடத்துவதற்கு அந்தக் கடிதம் தடை ஏதும் விதிக்கவில்லை. அந்தக் கடிதம் உண்மையானதே என்பதை கல்வி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
கல்வி அமைச்சின் துணைத் தலைமை இயக்குநரும் (பள்ளிக்கூட நடவடிக்கைப் பிரிவு) ஆசிரியர் கல்விக் கழகத்தின் துணைத் தலைமைப் பதிவாளருமான அஸ்ட்மான் தாலிப் அதில் கையெழுத்திட்டுள்ளார்.
இந்துக்களால் கொண்டாடப்படும் விழா பொங்கல் விழா என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் 13.1.2020 என தேதியிடப்பட்டுள்ளது.
வெவ்வேறு சமய நம்பிக்கையைக் கொண்ட சமய நடவடிக்கைகளில் முஸ்லிம்கள் பங்கேற்பது ஹராம் என்று அந்தக் கடிதம் கூறியுள்ளது.
பொங்கல் விழாக்களில் முஸ்லிம்கள் பங்கேற்பது தொடர்பான விதிமுறைகள் மீது கடந்த ஏப்ரல் மாதம் ஜாக்கிம் ஷரியா நிபுணர்கள் குழு நடத்திய 100ஆவது கூட்டத்தின் அடிப்படையில் இந்த முடிவு அமைந்திருக்கின்றது எனவும் அந்தக் கடிதம் கூறியுள்ளது.
அதே சமயம் முஸ்லிம்கள் மற்றவர்களின் கடவுள்களை அவமதிக்கக்கூடாது எனவும் அந்தக் கடிதம் நினைவுறுத்தியது.
இஸ்லாத்தைப் பின்தள்ளும் நோக்கத்தைக் கொண்டிருக்காமல் முஸ்லிம்கள் தங்கள் நண்பர்களுக்கும் அண்டை வீட்டுக்காரர்களுக்கும் வாழ்த்துக் கூறலாம் எனவும் அந்தக் கடிதம் கூறியுள்ளது.
பொங்கல் விழா தமிழர்களின் அறுவடைத் திருநாளாக அமைந்திருக்கின்றது. இந்து சமயத்திற்குள்ளோ அல்லது வேறு சமயத்திற்குள்ளோ அது உள்ளடக்கக்கூடியதன்று.
தை மாதத்தின் முதல் நாள் தொடங்கி மூன்று நாட்களுக்குப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.