அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம்: விலகி விடுவோம்

ஈரான் எச்சரிக்கை

துபாய் –

அணுவியல் உடன்படிக்கை தொடர்பான விவகாரத்தை ஐ.நா.பாதுகாப்பு மன்றத்தின் கவனத்திற்கு ஐரோப்பிய நாடுகள் கொண்டு செல்லுமானால், உலகளாவிய அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்து (என்.பி.டி.) தாங்கள் விலகிக் கொள்ளப் போவதாக ஈரான் நேற்று எச்சரித்தது. மேலை நாடுகளுடன் ஈரான் மோதலில் ஈடுபட முன்வந்திருப்பதை இது காட்டுகிறது.

கெடுபிடிப் போர் தொடங்கியதிலிருந்து உலகளாவிய அணுஆயுதக் கட்டுப்பாட்டுக்கு அடித்தளமாக விளங்குவது 1968ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட என்.பி.டி. ஒப்பந்தமாகும். அதன் அடிப்படையில்தான் கடந்த 2015ஆம் ஆண்டில் ஈரான் உலக வல்லரசு நாடுகளுடன் அணுவியல் உடன்படிக்கையொன்றில் கையெழுத்திட்டது.

ஈரான் தனது எறிபடை மற்றும் அணுவியல் திட்டங்களை நிறுத்தும் பட்சத்தில் அந்நாட்டின் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகள் அகற்றப்படும் என்பது அந்த உடன்படிக்கையின் சாரமாகும். ஈரான் அந்த உடன்படிக்கையை மதித்து நடக்கவில்லை என்று கூறி ஈராண்டுகளுக்கு முன்பு அதிலிருந்து விலகிக் கொண்டது.

இந்நிலையில், ஈரானுடன் அந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசுகள், அணுவியல் உடன்படிக்கையை ஈரான் மீறி நடப்பதாக கடந்த வாரம் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டின. இதனைத் தொடர்ந்து அந்த விவகாரம் ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்கும் அந்நாட்டின் மீது ஐ.நா. தடைகள் விதிப்பதற்கும் வழிகோலியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து ஈரானிய ஊடகங்களிடம் பேசிய அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜாவத் ஷரிப், ஐரோப்பிய நாடுகள் முறை தவறி நடந்தாலோ அல்லது இப்பிரச்சினையைப் பாதுகாப்பு மன்றத்திற்கு கொண்டு சென்றாலோ என்.பி.டி. ஒப்பந்தத்திலிருந்து ஈரான் தன்னை மீட்டுக் கொள்ளும் என்று எச்சரித்தார்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே தற்போது மூண்டுள்ள ராணுவ மோதலுக்கு முக்கிய காரணமாக இருப்பது அணுவியல் ஒப்பந்தம் மீதான சர்ச்சை ஆகும். என்.பி.டி. ஒப்பந்தத்தில் மொத்தம் நூற்று தொண்ணூறு நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றைத் தவிர்த்து மற்ற நாடுகள் அணுஆயுதங்கள் பெறுவதற்கு அந்த ஒப்பந்தம் தடை விதிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here