சென்னை –
துக்ளக் விழாவில் நான் பேசியது தொடர்பாக யாரிடமும் மன்னிப்புக் கேட்க மாட்டேன் என்று நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாகக் கூறினார்.
கடந்த வாரம் நடைபெற்ற துக்ளக் பத்திரிகை விழாவில் கலந்துகொண்டு ரஜினி பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 1971ஆம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் தலைமையில் மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணி நடைபெற்றது. அந்தப் பேரணியின்போது ராமர் மற்றும் சீதை ஆகியோரின் படங்கள் நிர்வாணமாக எடுத்துவரப்பட்டதாகவும் அவை செருப்பால் அடிக்கப்பட்டதாகவும் தமது பேட்டியில் கூறியிருந்தார் ரஜினி.
இதற்குத் தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ரஜினிக்கு எதிராக காவல்துறையிலும் புகார்கள் செய்யப்பட்டன. மன்னிப்புக் கேட்கத் தவறினால் ரஜினியின் இல்லத்தை முற்றுகையிடுவோம். அவரின் படங்களைத் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் திராவிடக் கட்சிகள் எச்சரித்தன.
நேற்று இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசியபோது “நான் யாரிடமும் மன்னிப்புக் கேட்க முடியாது” என்றார் ரஜினி. “இல்லாத விஷயத்தை நான் கூறவில்லை. அந்தப் பேரணி தொடர்பாக துக்ளக் பத்திரிகையில் வெளியான செய்தியைத்தான் நான் சுட்டிக்காட்டினேன்” என்றார் அவர்.