சென்னை –
டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாடகம் ஆடி வருவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாளை மறுதினம் தொடங்கும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்த விவகாரம் தொடர்பாக புயலை கிளப்புவோம் என்றும் திமுக சும்மா விடாது எனவும் ஆவேசம் காட்டினார்.
மத்திய அரசு அறிவிக்க வேண்டியதை முதல்வர் அறிவித்து விவசாயிகளை ஏமாற்றும் செயலில் ஈடுபட்டுள்ளதாக ஸ்டாலின் வேதனை தெரிவித்தார்.
சென்னை மதுரவாயலில் நடைபெற்ற திமுக பிரமுகர் இல்ல மணவிழாவில் பேசிய மு.க. ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தலை மனதில் வைத்து விவசாயிகளை ஏமாற்றும் செயலில் இறங்கியுள்ளதாகவும், பாவம் அது தெரியாமல் சிலர் அவருக்கு நன்றி கூறி வருவதாகவும் தெரிவித்தார்.
வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டிய பொறுப்பும், அதிகாரமும் மத்திய அரசுக்கு உள்ள நிலையில் முதல்வர் அறிவித்திருப்பது ஏமாற்று வேலை என சாடினார். நீட் தேர்விலும் இப்படித்தான் வரவே வராது எனக் கூறியவர்க பின்னர் பல்டி அடித்தார் என விமர்சித்தார்.
டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்திருந்தாலும், அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது. மத்திய அரசிடம் துணிவாக பேசி முதல்வர் அறிவித்ததை செயல்பாட்டுக்கு கொண்டுவருவார்களா என்பது சந்தேகம் தான் என்றும் காரணம் அதிமுக அடிமை ஆட்சி நடத்தி வருவதாகவும் இதனால் அவர்கள் டில்லியில் வற்புறுத்தி எதையும் பேசமாட்டார்கள் என்றும் தாக்கினார்.
அதிமுக அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சூழல் விரைவில் வரும் என கூறினார்.