உலக மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8-ந்தேதி அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாள் பல நாடுகளில் பொதுவிடுமுறை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் ஆதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது என்று குறிப்பிடவேண்டும். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
18-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். வீட்டு வேலைகளை செய்வதற்காக பெண்களை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்திருந்தனர். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்ப கல்வி கூட தரப்படாமல் மறுக்கப்பட்டது.
அந்த காலக்கட்டத்தில் பல தடங்கலுக்கு பிறகு நிலக்கரி சுரங்கங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பெண்களுக்கு பணிபுரிய வாய்ப்பு வழங்கப்பட்டது. பெண்களால் தொழிற்சாலைகளிலும் வேலை செய்ய முடியும் என்பது உலகுக்கு உணர்த்தப்பட்டது. ஆண்களுக்கு நிகராக பணியாற்ற பெண்களுக்கு வாய்ப்பு கிடைத்ததே தவிர ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. இதனால் பெண்கள் மிகவும் வருத்தப்பட்டனர். ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைகள் வழங்கக்கோரி குரல் எழுப்பினர். அப்போதைய அமெரிக்க அரசு இதற்கு செவிகொடுக்கவில்லை. இதனால் அமெரிக்கா முழுவதும் வேலை செய்யும் பெண்கள் கிளர்ச்சியில் இறங்கினர்.
1857-ம் ஆண்டு மார்ச் 8-ந்தேதி இதற்கான போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை அரசின் ஆதரவுடன் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் ஒடுக்கினர். அதன்பிறகு 1907-ம் ஆண்டு சம ஊதியம், சமஉரிமை கேட்டு பெண்கள் போராட தொடங்கினர். 1910-ம் ஆண்டு டென்மார்க் மாநாட்டில் பெண்கள் உரிமை மாநாடு நடந்தது.
இதில் உலகின் பலநாடுகளை சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துகொண்டு தங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டினார்கள். இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜெர்மனி கம்யூனிஸ்டு தலைவர் கிளோமேரேசெர்கினே உலக மகளிர் தினம் மார்ச் 8-ந்தேதி கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால் பல்வேறு தடங்களால் அந்த தீர்மானம் நிறைவேறவில்லை.