மலேசியாவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோக்வின் மாத்திரைகள்

இந்தியா இணக்கம்

புதுடில்லி –

கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சைகாக ஹைட்ராக்ஸிகுளோரோக்வின் மாத்திரைகளை மலேசியாவுக்கு விற்க இந்தியா இணக்கம் தெரிவித்திருக்கிறது. மலேரியா எதிர்ப்பு மாத்திரைகளான இவற்றை ஏற்றுமதி செய்வதற்கு புதுடில்லி முன்பு தடை விதித்திருந்தது. அந்தத் தடை இப்போது மீட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

உலகிலேயே இந்தியாவில்தான் ஹைட்ராக்ஸிகுளோரோக்வின் மாத்திரைகள் பெரிய அளவில் தயாரிக்கப்படுகின்றன. கொரோனா பரவியுள்ள இந்தக் காலகட்டத்தில் அமெரிக்கா உட்பட உலகம் முழுமையும் இந்த மாத்திரைக்கு அதிகக் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

கொரோனாவை எதிர்த்துப் போராடக்கூடிய மருந்தாக இது உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்த மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை இந்தியா மீட்டுக் கொண்டிருக்கிறது.

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும் அண்டை நாடுகளுக்கும் இந்த மாத்திரைகளை விற்பனை செய்ய இந்தியா இணக்கம் தெரிவித்திருக்கிறது.
மலேசியாவுக்கு 89,100 ஹைட்ராக்ஸிகுளோரோக்வின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய ஏப்ரல் 14ஆம் தேதி இந்தியா இணக்கம் தெரிவித்தது என்று வெளியுறவுத் துணை அமைச்சர் கமாருடின் ஜபார் ராய்ட்டரிடம் கூறியதாக ஃபிரி மலேசியா டுடே செய்தி வெளியிட்டது.

இந்தியாவிடம் இருந்து இன்னும் அதிகமான மாத்திரைகளைப் பெறுவதற்கு நாங்கள் முயற்சி செய்வோம் எனவும் அவர் கூறினார். இந்த விவகாரம் தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சு கருத்து எதனையும் வெளியிடவில்லை.

கொரோனா நோயாளிகளுக்கு மற்ற மருந்துகளுடன் இந்த மாத்திரைகளையும் மலேசியா பயன்படுத்தி வருகிறது. தென் கிழக்காசியாவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் மலேசியாவும் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here