ஈப்போ: பேராக் மாநில சட்டசபை வரும் மே 12ஆம் தேதி ஒரு நாள் அமர்வுக்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று பேராக் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அஹ்மத் பைசல் அஸுமு தெரிவித்தார். பேராக் சுல்தான் நஸ்ரின் முயிசுதீன் ஷா ஒப்புதலை வழங்கியிப்பதோடு அந்த அமர்வினை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைப்பார்.
காலையில் திறந்து ஒரு குறுகிய அமர்வை நடத்தி மாநில சபாநாயகர் டத்தோ என்ஜே கோ ஹாமுடன் கலந்துரையாட திட்டமிட்டுள்ளேன். புதன்கிழமை (ஏப்ரல் 22) தனது அலுவலகத்தில் விலங்கு நலக்குழு முகக்கவசம், கையுறை உள்ளிட்ட சில தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களைப் பெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த அமர்வில் வாய்வழி கேள்வி-பதில் இருக்காது. கேள்விகளுக்கு எழுதப்பட்ட பதில்கள் மட்டுமே என்று அவர் கூறினார். அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்களும் அமர்வதற்கு முன்பு சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்று பைசல் கூறினார்.
பெரிகாத்தான் நேஷனல் கடந்த மாதம் மாநிலத்தில் பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் அமர்வு இதுவாகும். கடந்த மார்ச் 13 அன்று பைசல் பதவியேற்றார், மாநில நிர்வாக சபை உறுப்பினர்கள் மார்ச் 31 அன்று பதவியேற்றனர். மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் வைத்திருக்கும் அந்தந்த இலாகாக்கள் ஏப்ரல் 7 ஆம் தேதி அறிவிக்கப்பட்டன.