நம் நாட்டில் ஒவ்வொரு குடும்பமும் தனித்திருக்கும் இவ்வேளையில், அனைவரையும் ஒன்றிணைக்கும் பணியில் உள்ள தகவல் தொழில்நுட்ப துறையின் சேவை பாராட்டுக்குரியது என கெரக்கான் கட்சியின் தேசிய துணைத் தலைவர் டத்தோ பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு உலக நாடுகள் கொரோனா தொற்றால் பாதிப்படைந்து வருகிறது. நம் நாடும் இதற்கு விதிவிலக்கல்ல. இருப்பினும், அரசு தனது பல்வேறு சட்டங்கள் மூலம் கொரோனா நோய் தொற்றின் வீரியத்தை கட்டுப்படுத்தி வருகிறது என்றே சொல்லலாம்.
மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தில் கட்டுப்பாடு, நடமாட்ட தடைச் சட்டம், வெளி மாநிலங்களுக்கான விமான சேவை ரத்து, நாட்டின் எல்லைப்பகுதிகளில் கடும் கட்டுப்பாடு என பல்வேறு வழிகளில் கொரோனா நோயை கட்டுப்படுத்த அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது புறமிருக்க., மனிதனால் மனிதனுக்கு பரவும் நோய் தொற்று என்பதால் நாடெங்கும் நடைபெறவிருந்த பல்வேறு சந்திப்புகள், கருத்தரங்குகள், பொது நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் என ஆரம்பித்து தொழுகை கூடங்கள் வரை நீண்டது கட்டுப்பாடுகள்.
இந்நிலையில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவர்தம் வீட்டிலேயே அடைந்து இருக்க வேண்டும் என்ற விநோதமான நிலை.இதில் பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அடக்கம். அத்தியாவசிய காரணங்களை காவல் துறையினரிடம் எடுத்துக் கூறி உரிய ஒப்புதல் பெற்ற பிறகே 10 கி.மீட்டர்கள் வரை பயணிக்கலாம் என்கின்ற சட்டம்., மக்களை எங்கும் செல்லவிடாமல் மேலும் சுருக்கியது.
இப்படி ஒரு கட்டத்தில் தான், நம் நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறையின் சேவையை குறித்து பெருமையும், பெருமிதமும் கொள்ள வைக்கிறது. உள்நாடு வெளிநாட்டில் வசிக்கும் உறவினர்கள், நண்பர்கள், நலன் விரும்பிகள், ஆசிரியர்கள், தொழில் துறையைச் சார்ந்தவர்கள், வியாபாரிகள் என எவரையும் சந்திக்க முடியாது போனாலும், நினைத்த மாத்திரத்தில் அவர்களிடம் நம் எண்ணங்களை பரிமாறிக் கொள்ளலாம் என்பது தான் இன்று நமக்கெல்லாம் கிடைத்திருக்கும் ஒரே மகிழ்ச்சி.
செல்கோம், மேக்ஸிஸ், டிஜி போன்ற நிறுவனங்கள் மக்களுக்காக ஆற்றி வரும் சேவை அளப்பரியது. காவல் துறை, மருத்துவத் துறை, ஊடகத் துறை போன்று இந்த இக்கட்டான காலகட்டத்தில் மனித உணர்வுகளை இணைக்க சேவையாற்றி வரும் தகவல் தொழில்நுட்பத் துறையினர் பாராட்டுக்குரியவர்கள்.
செல்கோம், மேக்ஸிஸ், டிஜி போன்ற நிறுவனங்களின் தொய்வில்லா சேவையின் மூலம் நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் பயன் பெறுகிறார்கள் என்பது யதார்த்தமான உண்மை. இது போன்ற நிறுவனங்கள் நமக்கு வழங்கி வரும் இன்டர்நெட் சேவை மூலம் குழந்தைகளின் படிப்பு முதல் வயது முதிர்ந்தவர்களின் உணர்வுகள் வரை பாதுகாக்கப்படுகிறது. மேலும், இந்நிறுவனங்கள் தங்களின் பயனீட்டாளர்கள் செலுத்த வேண்டிய கட்டணத் தொகைக்கான கால வரம்பை நீட்டித்திருப்பது வரவேற்கத்தக்கது.
இது போன்ற இக்கட்டான காலகட்டத்தில் அரசுடன் கை கோர்த்துச் செல்லும் அந்நிறுவனங்களின் தலமையையும் அதில் பணியாற்றும் பணியாளர்களைனும் நாம் நமது பாராட்டுதல்கள் மூலம் அங்கீகரிக்க வேண்டும் என்றும் நான் குறிப்பிட வேண்டுகிறேன் என தனது அறிக்கையில் டத்தோ பரம் தெரிவித்துள்ளார்.