தேர்தல் நெருங்கும் வேளையில் பணம் வாங்கிக்கொண்டு ஒரு கும்பல் இனவாதத்தைத் தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த கும்பலுக்கு எதிராக ரமணன் இராமகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் நோக்கில் செயல்படும் இந்த இனவாத, தீவிரவாத தூண்டுதல்களை மக்கள் முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சரும் சுங்காய் பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமாகிய அவர் வலியுறுத்தியுள்ளார்.
மலேசியா பல்வேறு இனங்கள், கலாச்சாரங்களைக் கொண்ட நாடு என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் இன உணர்வுகளைத் தூண்டும் வகையிலான கருத்துகளும் விமர்சனங்களும் பரப்பப்படுவது கவலையளிப்பதாகத் தெரிவித்தார். மடானி அரசாங்கத்தின் சாதனைகளை விமர்சிக்க வேறு வழியில்லாத சில தரப்பினர், இனவாத உணர்வுகளைத் தூண்டி மக்களைத் திசைதிருப்ப முயல்கின்றனர். இத்தகைய செயல்கள் 33 மில்லியன் மலேசியர்களின் எதிர்காலத்தைப் பணயம் வைப்பதாகும் என அவர் குறிப்பிட்டார்.
அரச குடும்பம், இனம், சமயம் (3R – Royalty, Race, Religion) சார்ந்த 3 ஆர் விவகாரங்களை ஆயுதமாகப் பயன்படுத்தி நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிப்பவர்கள் மீது அரசாங்கம் தயவுதாட்சண்யமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கும். கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பேச்சு சுதந்திரத்தை, சமுதாயத்தைப் பிளவுபடுத்தப் பயன்படுத்தக் கூடாது என்றும், சட்டத்தின் மேலாதிக்கமே நாட்டின் அமைதிக்கு அஸ்திவாரம் என்றும் அமைச்சர் புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மக்கள் அமைதிகாக்க வேண்டும். இதுபோன்ற கும்பலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் வலையில் விழாமல் இருக்கும் அதே வேளையில் உணர்ச்சிக்கு உள்ளாகி இதுபோன்றவர்களை பெரிய மனிதர்களாக்கிவிடவேண்டாம் எனவும் ரமணன் வலியுறுத்தினார். சட்டம், போலீஸ் தரப்பு கட்டாயம் தன் கடமையை செய்யும். இதுகுறுத்து நாடாளுமன்றத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. இருந்தபோதிலும் இந்த கும்பளுக்கு எதிரான நடவடிக்கைகளை விரைவுப்படுத்தும் வகையில், இதனை மீண்டும் நாடாளுமன்றத்தில் பேசுவேன் எனவும் ரமணன் உறுதியளித்தார்.
ராமேஸ்வரி ராஜா
எஸ். சண்முகம்




















