பல்கேரியா நாடு கொரோனா தொற்று சமயத்தில் மக்களைக் கண்காணிக்க ஸ்மார்ட் வாட்சுகளை பயன்படுத்தும் சோதனையை சமீபத்தில் மேற்கொண்டுள்ளது.
சோஃபியாவில் வாழும் 50 பேருக்கு இந்த கருவி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களின் நடமாட்டம் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்பட்டுப் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
பல நாடுகள் இது போன்ற கருவிகளைப் பயன்படுத்தி மக்கள் வீட்டில் இருக்கின்றனரா, ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடிக்கின்றனரா எனக் கண்காணிக்கும் சோதனையை நடத்தி வருகின்றன.
ஹாங்காங் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் கண்காணிப்பதற்காக மின்சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பல்கேரியாவில் நடத்தப்படும் இந்த சோதனையில் போலாந்தில் தயாரிக்கப்பட்ட கோமார்ச் ஸ்மார்ட்வாட்ச்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த கை கடிகாரங்கள் ஒருவர் வீட்டில் இருக்கிறாரா என்பதைக் கண்காணிப்பதுடன் அணிந்திருப்பவரின் இதயத்துடிப்பைக் கணக்கிடுவது மற்றும் அவசர எண்ணுக்கு அழைக்கும் வசதி ஆகியவையும் கொண்டுள்ளது.
தென் கொரியாவில் தனிமைப்படுத்தலை மீறுபவர்கள் இந்த கை கடிகாரங்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றனர்.
மக்கள் பிடிபடக்கூடாது என்பதற்காக தங்கள் அலைபேசியை வீட்டில் வைத்துவிட்டுச் செல்வதனால் இந்த கருவி அறிமுகப்படுத்தப்பட்டது.
இதைக் கழட்டினாலோ அல்லது வீட்டை விட்டு வெளியேற முயன்றாலோ இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளை எச்சரிக்கும்.
கொரோனா தொற்று சமயம் இவ்வாறான கண்காணிப்பில் ஈடுபட்டாலும், இது தற்காலிகமானது எனவும் அவசியமானது எனவும் ப்ரைவசி இண்டர்நெஷனல் போன்ற குழுவினர் கூறுகின்றனர்.
”இந்த தொற்றுக்கான சமயம் முடிந்தவுடன் இது போன்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் ”என ப்ரைவசி இண்டர்நெஷனல் தங்களுடைய வலைப்பூவில் பதிவிட்டுள்ளது.