முஸாஃபர்நகர்: உத்தரப்பிரதேசத்தில் நோயாளிகள் போல் நடித்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊர் திரும்பிய புதுமணத் தம்பதியை போலீஸார் மடக்கிப் பிடித்து தனிமைப்படுத்தினர்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு வரும் மே 3 ஆம்தேதி வரை அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் காசியாபாத் நகரில் இருந்து முஸாஃபர்நகர் நோக்கி ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த போலீஸார் சந்தேகமடைந்தனர்.
உடனே அந்த வாகனத்தை நிறுத்தினர். அப்போது அதில் நோயாளி போல் உடை அணிந்த இருவர் உள்ளே இருந்தனர். அவர்களை விசாரித்ததில் அவர்கள் புதுமணத் தம்பதி என தெரியவந்தது. இதையடுத்து ஆம்புலன்ஸில் இருந்த தம்பதியின் உறவினர்கள் 7 பேர் உள்பட 9 பேரும் கத்தொலி என்ற பகுதியில் உள்ள அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதையடுத்து விதிகளுக்கு மாறாக ஆம்புலன்ஸை தவறாக பயன்படுத்தியதாக ஆம்புலன்ஸ் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.