லண்டன்,ஏப்ரல் 30-
கொலைகார கொரோனா வைரசால் ஒட்டுமொத்த உலகமும் முடங்கியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து நாடுகளிலும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.
அந்த வகையில் இங்கிலாந்தை சேர்ந்த பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமான நிறுவனமும் கொரோனா பாதிப்பால் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இந்த நிறுவனத்தில் சுமார் 45 ஆயிரம் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் நிலைமையை கட்டுப்படுத்த விமானிகள் உள்பட தனது ஊழியர்களில் 12 ஆயிரம் பேரை ஆட்குறைப்பு செய்ய பிரிட்டீஸ் ஏர்வேஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிர்வாகம் எடுத்துள்ள இந்த முடிவால், அங்கு பணியாற்றி வந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தொழிற்சங்கங்கள் ஆவேசமடைந்துள்ளன. வேலையை மீட்டெடுக்க போராட்டம் நடத்துவோம் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனிடையே பிரிட்டீஸ் ஏர்வேஸ் நிறுவனத்தை பின்பற்றி இங்கிலாந்தில் உள்ள மற்ற விமான நிறுவனங்களும் ஆட் குறைப்பு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.