இந்தோனேசிய வெள்ளம்: உயிரிழப்பு 1,000-ஐ கடந்தது – மீட்புப் பணியாளர்கள்

ஜகார்த்தா:

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 1,003 பேர் உயிரிழந்துள்ளதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களாக பெய்து வரும் தொடர்ச்சியான கனமழை காரணமாக ஏற்பட்ட இந்த பேரிடரில், 5,400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று தேசிய பேரிடர் தணிப்பு அமைப்பு (BNPB) கூறியுள்ளது. மேலும், 218 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர், இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

பெருவெள்ளத்தின் தாக்கத்தால் சுமார் 1.2 மில்லியன் மக்கள் தங்களது வீடுகளை இழந்து, தற்காலிக தங்குமிடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதற்கிடையில், மீட்பு நடவடிக்கைகள் மெதுவாக நடைபெறுவதாக பாதிக்கப்பட்டவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ சுமத்ராவின் வடக்கே உள்ள லங்காட் நகரை நேரில் பார்வையிட்டு, நிலைமை படிப்படியாக மேம்பட்டு வருவதாக கூறினார். “இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களால் சில இடங்களில் மீட்பு பணிகள் தாமதமடைந்துள்ளன. இருப்பினும், தற்காலிக தங்குமிடங்கள், உணவு மற்றும் அடிப்படை சேவைகள் போதுமான அளவில் வழங்கப்பட்டு வருகின்றன,” என்று அவர் தெரிவித்தார்.

பேரிடரால் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைத்து நகரங்களை மறுநிர்மாணிக்க சுமார் S$4 பில்லியன் செலவாகும் என அதிகாரிகள் மதிப்பீடு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here