கொரோனா காட்டிய இரக்கத்தை பசியும், பட்டினியும் காட்டவில்லை…!

உயிரிழந்த தொழிலாளி ரவி

சென்னையில் யாருடைய ஆதரவும் இல்லாத ஒரு முதியவர் ஊரடங்கு காரணமாக வேலை இல்லாததால் உண்ண உணவு இன்றி பசியால் உயிரிழந்துள்ளார்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளி ரவி. 58 வயதான இவருக்கு குடும்பம் என்று யாரும் இல்லை. வேலைக்குச் சென்று கிடைத்ததை சாப்பிட்டு சாலையிலேயே வாழ்நாளை கழித்து வந்தவர்.

நீண்ட நாட்களாக இவருக்கு ஆஸ்துமா நோய் உள்ளது. இந்த சூழ்நிலையில் ஊரடங்கு உத்தரவால் தற்போது வேலை எதுவும் இல்லாமல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் ரவி சுற்றித்திரிந்து உள்ளார். அவ்வப்போது தன்னார்வ நபர்கள் கொடுக்கும் உணவை கொண்டு சில நாட்களை கழித்துள்ளார்.

அதன் பின்னர் எங்கேயும் உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. ஆஸ்துமாவுக்கு உரிய சிகிச்சை எடுக்காததால் மாத்திரையும் கிடைக்காததால் நோய் முற்றி உள்ளது. ஒரு பக்கம் பசி கொஞ்சம் கொஞ்சமாக அவரை கொலை செய்து வந்திருக்கிறது. பட்டினி கிடக்கும் நாட்கள் அதிகரிக்க தொடங்கியது.

வேறுவழியில்லாமல் சென்ட்ரலில் இருந்து தன்னுடைய சகோதரியின் வீடு இருக்கும் ஜாபர்கான்பேட்டைக்கு வந்துள்ளார். இருமிக்கொண்டே அவர் வருவதை பார்த்த வீட்டின் உரிமையாளரும் அவரது சகோதரியும் அவரை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.

இந்தநிலையில் மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா இல்லை என்ற முடிவு வந்தது. இருப்பினும் அவர் மீண்டும் சகோதரி வீட்டுக்கு வந்த போது அக்கம்பக்கத்தினர் எதிப்பு தெரிவித்த்தால் வேறு வழியின்றி மீண்டும் ஜாபர்கான்பேட்டை சாலை ஓரத்தில் சில நாட்களை கழித்தார்.அவரால் எழுந்து சென்று எங்கேயும் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டது. பசி பட்டினி ஆஸ்துமா இவை அனைத்தும் ஒன்றாக சேர்ந்ததால்  ரவி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாநகராட்சி ஊழியர்கள் வந்து உடலை எடுத்துச் சென்றனர்.

எந்தவிதமான பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாமல் சாலையோரத்தில் சுற்றி திரிந்த ரவி மீது கொரோனா இரக்கம் காட்டி இருக்கிறது. ஆனால் பசியும் பட்டினியும் அவர் மீது இரக்கம் காட்டவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here