அக்கறை அக்கரையில் இல்லை

காலையில் எழுந்ததும் கடவுளை வழிபடும் பழக்கம் பலரிடம் இல்லை. ஆனாலும் பரவாயில்லை. கடவுள் தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பார் என்பது உண்மையென்று ஒப்புக்கொள்ளும் அளவில் முன்னணி பணியாளர்கள் அதை நிரூபித்து வருகிறார்கள்.

சுகாதார அமைச்சில் (எம்ஓஎச்) உள்ள அனைவருக்கும் ஆழ்ந்த நன்றி, குறிப்பாக, அன்புக்குரிய தேசத்தில் கோவிட் -19 பரவுவதைக் கட்டுப்படுத்தும் பொதுவான இலக்கை நோக்கி ஒரு குழுவாக பணியாற்றுவதை சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் வெகுவாகப் பாராட்டியுள்ளார். அவர் சுகாதாரப்படைத் தளபதியாகவும் இருக்கிறார்.

உலகின் பல நாடுகளில் காணப்படுவது போல தேசிய பேரழிவைத் தவிர்ப்பதில் இதுவரை வெற்றியின் பாதைதான் தெரிகிறது. ஆனாலும் செல்லும் தூரம் அதிகம், கொரோனாவுக்கு எதிர்ப்பான யுத்தம் இன்னும் முடிவடையவில்லை, அடுத்த வாரம் ஒரு புதிய சவாலில், புதிய உத்திகளைக் கொண்ட போராட்டமாகவே இருக்கும்.

அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாக அனைத்து மலேசியர்களும் கூட்டாக ஒன்றிணைந்தால் மட்டுமே இந்த யுத்தத்தில் வெல்ல முடியும். சமூக ஒழுக்கமும் சமூக இணக்கமும் இருக்க வேண்டும் – சமூக இடைவெளியை மிக முக்கியமாகக் கருத்தில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட சுகாதாரத்தை அவசியம் பேணவேண்டும்.

மே 4 ஆம் நாளில் பலர் மீண்டும் வேலைக்குச் செல்லவிருக்கிறார்கள். எவ்வாறாயினும் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் இணங்குவதற்கும் பணியிடத்தில் புதிய விதிமுறைகளை பின்பற்றுவதற்கும் தேவையானதைத் திட்டமிட்டு செய்ய வேண்டும்.

அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிப்பதை முதலாளிகள் உறுதிப்படுத்த வேண்டும், குறிப்பாக வரையறுக்கப்பட்ட இடங்களில். அலுவலக இடத்தை மிகவும் விசாலமாகவும் பாதுகாப்பாகவும் மாற்ற மறுசீரமைக்க வேண்டியிருக்கலாம், பணியிடத்தில் நடமாடும் இடங்கள் அல்லது பிரார்த்தனை அறைகள் (சூராவ்) போன்ற பொதுவான பகுதிகளை தவறாமல் சுத்தப்படுத்தப்பட வேண்டும்.

சுகாதார வழிகாட்டுதல் கொள்கைகள் தெளிவாக உள்ளன , அவற்றைச் செயல்படுத்த முதலாளிகளின் பொறுப்பு மிக முக்கியமாக உள்ளது. முதலாளிகள் தொழிலாளர்களின் நல்லுறவு வெளிப்பட்டால் மட்டுமே இடு சாத்தியம்.

ஆதாய நோக்கத்தை கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு, அக்கறையோடு இருந்தால் தொற்றுநோய் தூரத்திலேயே இருக்கும். வாழ்க்கை நடைமுறை முன்புபோல் இனியும் இருக்காது, அரசியல் பேசுவதைவிட கூடுதலாக சுகாதாரம் பேசவேண்டியிருக்கும். கைகுலுக்கும் பழக்கம் கட்டிப்பிடி என்பதெல்லாம் இனி தேவைப்படாது. கைகூப்புதல் சிறப்பானதாக இருக்கும்.

அன்புக்குரியவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்த ஒருவருக்கொருவர் உதவுதலே பழக்கமாக மாறவேண்டும். காரணம், நாம் மலேசியர்கள். மலேசியாவை பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டிய பொறுப்பு அனைவரிடமும் இருக்கிறது.

கண்ணுக்குத் தெரியாத எதிரிக்கு எதிரான இந்தப் போரின் முடிவில், வெற்றி நமதாகவே இருக்க வேண்டும். வெளியே செல்ல எந்த காரணமும் இல்லையென்றால் ஏன் வெளியே செல்ல வேண்டும்? அறிவு சொல்வதை அக்கறையோடு கேட்கவேண்டும்.

நம்மைப் பற்றியும் நம் உறவுகள் பற்றியும் சுற்றியுள்ளவர்கள் பற்றியும் சிந்திப்பதே காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. சுற்றியுள்ளவர்களில் உறவுகளும் இருக்கக்கூடும். அவர்களும் பாதுகாப்பாய் இருக்க வேண்டுமெனில் நாமே உதாரணமாய் இருக்க வேண்டுமல்லவா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here