41 குடும்பங்கள் பரிதவிப்பு

சிரம்பான் –

சுமார் 35 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தாமான் டேசா ராசா அடுக்குமாடி வீட்டு கட்டடம் கடந்த சில ஆண்டுகளாக பாழடைந்து இடிந்து விழும் அபாயக் கட்டத்தில் உள்ளது.

சுமார் 196 வீடுகளை உள்ளடக்கிய இந்த குடியிருப்பு அடுக்குமாடியில் தற்போது சுமார் 41 குடும்பங்கள் மட்டுமே வசித்து வரும் வேளையில், இங்குள்ள பெரும்பாலான வீடுகள் இடிந்து உடைந்து, கதவு மற்றும் ஜன்னலின்றி மோசமான நிலையில் காணப்படுகின்றன.

காலியான சில வீடுகள் குப்பைக் கூளங்களாக மாறி, சுற்றுச் சூழலுக்கு அச்சுறுத்தலாக மாறி வருகிறது என அங்குள்ள குடியிருப்பாளர்களான திருமதி மீனாட்சி, திருமதி சாந்தி மேலும் சிலரும் கூறினர். அடுக்குமாடி வீட்டின் கட்டடத்தில் மரம், செடி, கொடிகள் முளைந்து, கட்டட சுவர்களில் ஆங்காங்கே மோசமான வெடிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

 

இதன் பாதிப்பு இந்த அடுக்குமாடி வீடு இடிந்து விழும் அபாய சூழலை ஏற்படுத்தியுள்ள வேளையில் இச்சூழல் இங்குள்ள குடியிருப்பாளர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கு மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் மற்றும் கடஸான் போன்று பல இன மக்கள் வசித்து வரும் குடியிருப்புப் பகுதியாக திகழ்கிறது. குறிப்பாக பெரும்பாலான ஏழை எளிய குடும்பங்களையே இங்கு காணமுடிகிறது.

மேலும் கோவிட்-19 தாக்கத்தால் வருமானமின்றி பலர் மிக மோசமான பாதிப்பை எதிர்நோக்கி அன்றாட வாழ்வாதாரத்திற்கு கடுமையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அங்குள்ள மக்களுக்கு உதவும் வகையில் நேற்று அப்பகுதிக்கு வருகை தந்த அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சா கீ சின் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எல்வின் யாப் தங்களின் நண்பர்களின் உதவியோடு அத்தியாவசியப் பொருட்களை அக்குடும்பங்களுக்கு நேரடியாக வழங்கினார்.

இதனிடையே இந்த அடுக்குமாடி வீட்டின் அவல நிலை குறித்து அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் யாப்பிடம் விளக்கம் கேட்டபோது, இதுவொரு நீண்ட நாளைய பிரச்சினை என்றும் தேசிய முன்னணி ஆட்சிக்காலம் தொடங்கி இருந்து வருவதாகக் குறிப்பிட்டார்.

இந்த அடுக்கு மாடி வீட்டின் கட்டடத்தை முழுவதாக பழுது பார்க்கும் திட்டத்திற்கு மாநில அரசாங்கத்தின் உதவி நாடப்பட்டது. மாநில அரசாங்கம் முந்தைய மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு இவ்விவகாரத்தை கொண்டு சென்றிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here