கொரோனாவின் பாதிப்புப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போதே கண்களில் மண்ணைத் தூவிவிட்டு நாட்டிற்குள் நுழைந்துவிடும் கள்ளத்தனம் அதிகமாகிவிடும் என்று அஞ்சப்படுவதால் மாற்று நடவடிக்கை கையாளப்படுகிறது.
கள்ளத்தனமாய் நுழைவதில் மலேசியம் என்பது இலகுவானதா? வெகு இலகு என்பது அவர்களின் எண்ணமாக இருக்கலாம். அப்படி எண்ணுதலுக்குப் பல காரணங்கள் வலுவாக இருக்கின்றன. குறிப்பாக ரோஹிங்கியர்களைக் உதாரணமாகக் கூற முடியும்.
இவர்களின் மலேசிய நுழைவுக்குக் காரணமாக மலேசியர்களும் உடந்தையாக இருக்கின்றனர் என்பதும், மிகச்சுலபமாக, பாதுகாப்பாக அடைக்கலம் தேடிக்கொள்ளலாம் என்பதும் முக்கிய காரணங்களாக இருக்கலாம்.
நுழைகின்றவர்கள் ராஜ மரியாதையுடன் வரவேற்கபடுகின்றனரா? இப்படியும் ஒரு கேள்வி மக்களிடையே நிலவுகிறது. குறிப்பாக, லங்காவித் தீவைக் களமாகக் கொண்டு நுழைகின்றவர்கள் மனித அகதிகளாக வந்து இறங்கிவிடுகின்றனர். இவர்களைத் தடுத்துவைத்து, வேண்டியதைச் செய்தும் கொடுக்கின்றனர். இதற்குப் பல உலகளாவிய அரசியல் காரணங்கள் கூறப்படுகின்றன. இப்படிக் கூறப்படுவதும் மருட்டல் ரகம்தான்.
இதற்கு மனிதாபிமானம் என்ற மாற்றுப் பெயரும் உண்டு. அதனால், வருகின்றவர்களை ஒதுக்கிவிடவும் முடியாது என்கின்றனர். இதில், கள்ளத்தனமாக நுழைகின்றவர்களைக் கொண்டுவரும் மலேசியர்களுக்கு கடற்துறையின் நடமாட்டம், ரோந்து நேரம் எல்லாம் அத்துப்படி . தெளிவாகத் தெரிந்திருக்கிறது என்றே பொருள்படுகிறது.
கள்ளத்தனமான நுழைவு யதார்த்தமாக நடப்பதில்லை. இது நீண்ட நாட்களின் திட்டம் என்பதே பரவலான உண்மை. இது, தொடர்ந்து நடைமுறையாகவே இருக்கிறது என்றால் அதுதானே காரணம். மலேசிய கடல் எல்லையில் நுழையும் முன்பே கள்ளத்தனமாய் நுழைகின்றவர்களைத் திசை திருப்பிவிடமுடியும். அப்படிச் செய்வதாக இதுவரை கேள்விப் பட்டதில்லை. அப்படியென்றால் கடல் ரோந்து நடவடிக்கை துல்லியமாக உணரப்பட்டிருக்கிறது என்றே நினைக்கத்தோன்றுகிறது.
கள்ளக் குடியேறிகள் கடல் எல்லக்குள் நுழைந்துவிட்டால் அதன் கதையே வேறு. அது பாதுகாப்பானதாகக் கள்ளக்குடியேறிகளுக்கு அமைந்துவிடும், கடல் எல்லைக்குள் நுழைந்த பிறகே கள்ளத்தனமாக நுழைந்ததன் அறிகுறி உணரப்படுகிறது. இதன் ரகசியம் என்னவாக இருக்கும்? காரணமில்லாமல் புகை வருமா?
அப்படியானால் கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்களுக்குக் கடல் நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் வழங்கப்படுகின்றன என்றாகிறது. இது உண்மையா? பொய்யா என்பதல்ல முக்கியம். மக்களின் சந்தேகத்திற்குத் தேவையான விளக்கமே தேவை.
இனி, ஏனோ தானோ பேச்செல்லாம எடுபடாது. எடுபடவும் கூடாது. காரணம் கொரோனா இன்னும் ஒழிந்த பாடில்லை. கூடுவதும் குறைவதும் என்ற நிலையில் இருப்பதால் இன்னும் கூடிதலாக மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி ஆணை நிபந்தனைகளுடன் ஒத்திப் போடப்பட்டிருக்கிறது.
கள்ளக் குடியேறிகளை, நுழையும்போதே தடுப்பதுதான் முக்கியப்பணியாக இருக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளில் இன்னும் அதிருப்தியே நிலவுகிறது.
தரை, கடல் ரோந்துப்படைகள் தங்கள் கடமையைப் பொறுப்புணர்ந்து ஆற்றவில்லையென்றே பலரின் குற்றச்சாட்டாய் இருக்கிறது. இது பெரிது படுத்தவேண்டிய அவசியமும் இருக்கிறது.
சிலாங்கூர் மாநிலத்தில் முக்கிய சந்தைப் பகுதியான செலாயாங் சம்பவம் ஒரு பாடமாக இருக்கிறது என்பதைக் கூறித்தான் ஆகவேண்டும்.
பொறுப்பற்ற்வர்ளாக அவர்களின் நடவடிக்கை மலேசியர்களுக்குச் சரியான கற்பித்தலை உருவாக்கியிருக்கிறது. பிரச்சினைகள் யாவும் கள்ளக் குடியேறிகளால்தான் ஏற்பட்டது. இவர்களுக்கு இடம் கொடுத்தது மனிதாபிமானமல்ல. நமக்கு நாமே வெடிகுண்டு வைத்துக்கொள்ளும் கதை இதுவாகத்தான் இருக்கும். கொரோனா வளர்ச்சிக்கும் இவர்களே காரணம் என்று செய்திகள் கூறுகின்றன. இதுவும் பொய்யல்ல.
இனி, கள்ளத்தனமாக நுழைகின்றவர்களைத் தடுப்பது பற்றியே யோசிக்கவேண்டும். அப்படித்தான் ஒரு முடிவுக்கு வந்ததுபோல் தெரிகிறது. ஒரு நாளைக்கு ஆறு விமானங்கள் கடல் பகுதியை மோப்பவிடுமென்று அறிவித்திருக்கிறார்கள்.
இதற்காக சிறு ரக விமானங்களைப் பயன்பாட்டிற்கு கலம் இறக்கியிருக்கிறார்கள். பகலில் நான்கு தடவையும், இரவில் இரண்டுமுறையும் இவ்விமானங்கள் ரோந்துப்பணியில் இருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. கடலை நம்பியதால் கைவிடப்பட்ட நேரத்தில், வானத்தில் வட்டமிடக் காத்திருக்கும் விமானங்களாவது கைகொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.