கோத்தா பாரு,
குவா மூசாங் – கோலா கிராய் சாலையின் 65ஆவது கிலோமீட்டரில் நேற்று காலை நிகழ்ந்த இரு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து நடந்த இடத்திலிருந்து, வீடுகளை உடைத்துத் திருடப் பயன்படுத்தப்படுவதாகச் சந்தேகிக்கப்படும் கருவிகளை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
நேற்று காலை 7 மணியளவில் குவா மூசாங்கிலிருந்து கோலா கிராய் நோக்கிச் சென்ற நிசான் கிராண்ட் லிவினா கார், எதிர்த்திசையில் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற டொயோட்டா எஸ்டிமா காருடன் உரசியதாக குவா மூசாங் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் சிக் சூன் ஃபூ தெரிவித்தார்.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த நிசான் கார், சாலையின் இடதுபுறமாகச் சறுக்கிச் சென்று கான்கிரீட் தடுப்புச் சுவரில் மோதியது. இதில் 56 வயதுடைய கார் ஓட்டுநர் லேசான காயங்களுக்கு உள்ளானார்.
இதனிடையே, டொயோட்டா எஸ்டிமா காரின் ஓட்டுநர் விபத்து நடந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
விபத்திற்கான காரணத்தைக் கண்டறியவும், தப்பிச் சென்ற ஓட்டுநரைக் கண்டுபிடிக்கவும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.













