கொரோனா காலத்தில் அரசியல் கொரோனாக்கள் அரசியல் தொற்று நோயை உருவாக்கிக் கொண்டிருகின்றன என்றும் மக்கள் சிரிப்பு மூட்டுகின்றனர். அரசியல்வாதிகள் மக்களின் கடுமையான் சாபத்திற்கும் ஆளாகிவருகின்றனர் என்பது தெளிவான் உண்மை.
அரசியல்வாதிகளின் கட்சித்தாவல்கள் அனைத்தும் மேல்- தாவிகளைவிட சூரத்தனமாக இருக்கிறது. ஒரு கட்சியை நம்பித்தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையோ, சட்டமன்ற உறுப்பினரையோ மக்கள் தேர்வு செய்கிறார்கள்.
தாங்கள் சார்ந்திருக்கும் கட்சிதான் போட்டியிடுகின்றவர்களின் அடையாளம். அவர்களாகவே தங்கள் அறிமுகத்தைச் செய்துகொண்டு பொதுத் தேர்தல்களில் வெற்றிபெற முடியாது. குறிப்பாக சுய வேட்பாளார்களாகத் தங்களை அடையாளப் படுத்திக்கொண்டு வெற்றிபெறுவது என்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கும். வைப்புத்தொகையை திரும்பப் பெறமுடியாமல் போனவர்களும் அதிகம்.
இதிலிருந்தே கட்சிதான் முக்கியம் என்பதைத் தெரிந்து கொள்ளமுடியும். கட்சியின் மீதுள்ள நம்பிக்கை வலுவாக இருந்தால் ஆட்சியும் அமைத்துக் கொள்ளமுடியும். ஆனாலும் கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துக் கொள்வதும் இணக்கத்தோடு விலகிக்கொள்வதும் கட்சிகளின் அவர்களின் தனிப்பட்ட கொள்கைப் பிரச்சினையாகும். இதில் கள்ளம் நிறைந்திருக்கும்.
முக்கியமாகச் சொல்ல வேண்டியது இதுதான். ஒரு கட்சியின் வழி, தங்கள் முகத்தைக் காட்டும்போது, முதலில் முகம் தெரிவதில்லை. கட்சிதான் தெரியும். கட்சியின் மீதுள்ள நம்பிக்கையால் மட்டும்தான் முகங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. கட்சியின் வழிதான் மக்களின் செல்வாக்கு பதிவாகிறது.
நாட்டின் பொதுத் தேர்தல்கள் இதை நன்கு உணர்த்தியிருக்கின்றன. ஒரு கட்சியில் ஒருபுதுமுகம் போட்டியிடுகிறார் என்றால், அவரை நம்புவதற்கு கட்சிதான் தாய் சக்தியாக இருக்கிறது. அவரைப் பற்றியே அறியாத மக்கள் கட்சியை நம்பித்தான் அவருக்கு வாக்களிக்கின்றனர்
வாக்களித்த மக்களுக்குக் கட்சித் தாவல்தான் பரிசு என்றால், வாக்களித்த மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகமும் இதுவாகத்தான் இருக்க முடியும். கட்சித் தாவிகளை மற்றொரு கட்சி வெட்கமில்லாமல் ஏற்றுக்கொள்கிறதென்றால் இதைவிட கேவலம் வேறு இருக்கமுடியாது. இதற்கு அரசியல் வே…….. தனம் என்று பெயர்.
கட்சித் தாவல் செய்யும் அரசியல் வாதிகள், வாக்களித்த மக்களுக்கு அல்வா கொடுப்பது எந்த வகையில் நியாயம். கட்சித் தாவுவதை தம் தொகுதி மக்களுக்கு எப்படிக் கூறபோகிறார்கள்? வீடுவீடாகச்சென்று கூறத்தாதானே வேண்டும். ஆட்சிக் கவிழ்ப்புக்கும் காரணமாக சோர்ம் இவர்கள் கட்சித்தாவல், நம்பிக்கைத் துரோகம் எனக்கருதி ஐந்து ஆண்டுகள் வரை அரசியலிலிருந்து தள்ளி வைக்கவேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டுவரவேண்டும்.
இன்றைய நிலையே தொடருமானால் வரும் பொதுதேர்தலில் இவர்கள் காணாமல் போகவேண்டும். துரோகிகள் மன்னிக்கப்படக்கூடாது. மக்கள் பொறுப்பாக வாக்களிக்க வேண்டும்.