ஜெய்பூர்: சமீப நாட்களாக நாடு முழுவதும் ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு நடைபயணமாகவும் டிரக்கிலும் திரும்பும் வழியில் பல்வேறு விபத்து சம்பவங்கள் நடந்து வருகின்றன. அண்மையில் மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் தண்டவாளத்தில் ஓய்வெடுத்த தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதியது. இதில் 17 பேர் அதே இடத்தில் துடிதுடித்து இறந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து உத்திரப்பிரதேசம் நோக்கி புலம்பெயர் தொழிலாளர்கள் லாரியில் சென்று கொண்டிருந்தனர். ஆரையா என்ற பகுதியில் அதிகாலை 3.30 மணிக்கு சென்றபோது, தொழிலாளர்கள் சென்ற லாரி மீது மற்றொரு லாரி மோதிக் கொண்டதில் கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், 23 புலம்பெயர் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 15 முதல் 20 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், பீகார், மேற்குவங்கம், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் விபத்து:
இதனைபோல், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பீகார் நோக்கி தொழிலாளர்கள் நடைபயணமாக புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகர் அருகே தேசிய நெடுஞ்சாலை எண் 9-ல் நேற்று இரவு சென்று கொண்டிருந்தனர். அப்போது உத்தரப்பிரதேச மாநில அரசு பேருந்து ஒன்று இந்த தொழிலாளர்கள் மீது திடீரென மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
மேலும், மத்திய பிரதேசத்தில் 60க்கும் அதிகமான தொழிலாளர்களுடன் சென்ற டிரக் ஒன்று பேருந்து மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 8 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த 8 பேரும் மகாராஷ்டிராவில் இருந்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த தொழிலாளர்கள். இப்படி சொந்த ஊர் சென்ற இடம்பெயர் தொழிலாளர்களில் 60-க்கும் அதிகமானோர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.