ஷா ஆலம், மே. 17-
பல மாநிலங்களில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து சிலாங்கூர் மாநிலத்திலும் ஆட்சி கவிழுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கெஅடிலான் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலியை ஆதரிக்கும் பல சட்டமன்ற உறுப்பினர்கள் அணி தாவக் கூடும் என்று தகவல் வெளியாகி வருகின்றன.
குறிப்பாக 10க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அணித் தாவத் தயாராக உள்ளனர் என்று தகவல் மற்றொரு புறம் பேசப்பட்டு வருகிறது.
இதை பற்றி கருத்துரைத்த சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி, இது வெறும் மலிவான பிரச்சாரங்கள். மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் எங்களுக்கு பக்கபலமாக இருக்கின்றனர் என்று கூறினார்.
மாநிலத்தின் கொள்கைகளுக்கு அனைவரும் உறுதுணையாக இருக்கின்றனர். ஆகவே சிலாங்கூரில் ஹராப்பான் அரசாங்கம் கவிழும் என்று அவர்கள் பகல் கனவு காண்கிறார்கள் என்று அவர் சாடினார்.
தினசரி கட்டுக்கதைகளை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள். இது பலிக்காது. தற்போது சிலாங்கூர் மாநிலத்தில் 56 சட்டமன்றத் தொகுதிகளில் ஜசெக 18 தொகுதிகளையும் அமானா 4 தொகுதிகளையும் பெர்சத்து 5 தொகுதிகளையும் வைத்திருக்கிறது.
கெஅடிலான் 21 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஆனால், டத்தோஶ்ரீ அஸ்மின் அலியும் (புக்கிட் அந்தாரா பங்சா) அவரது அரசியல் செயலாளர் ஹில்மான் (கோம்பாக் செத்தியா) கட்சியில் இருந்து வெளியேறியதால் இப்போது கெஅடிலான் வசம் 19 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.
பெர்சத்து கட்சியை சேர்ந்த 5 சட்டமன்ற உறுப்பினர்களில் நான்கு பேர் பக்காத்தா ஹராப்பானுக்கு ஆதரவு தருவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளனர். சிலாங்கூரில் அம்னோவுக்கு 5 தொகுதிகளும் பாஸ் கட்சிக்கு 1 தொகுதி மட்டுமே உள்ளன. அந்த வகையில் சிலாங்கூரில் பக்காத்தான் ஹராப்பான் மிக வலுவுடன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.