கூலிம் –
கூலிம் மாவட்ட போலீசார் ஷாபு போதைப்பொருளை வைத்திருந்ததாக நம்பப்படும் இரண்டு ஆடவர்களை கைது செய்து விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளதாக கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் ஓசிபிடி முகமட் யூசோப்பின் ஷாரி தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட்-19 கொரோனா வைரஸ் நடமாட்டக் கட்டுப்பாட்டை முன்னிட்டு கூலிம் பட்டர்வொர்த் நெடுஞ்சாலையில் கூலிம் மாவட்ட காவல் துறையை சேர்ந்த அதிகாரிகள் லூனாஸ் டோல் சாவடிக்கு பக்கத்தில் சாலைத் தடுப்பை போட்டு சோதனை மேற்கொண்டனர்.
நேற்று முன் தினம் நண்பகல் 12.00 மணி அளவில் அவ்வழியே வந்த பெரோடுவா கெலிசா கார் வருவதை நிறுத்தவே அக்காரில் இருந்த 25 மற்றும் 37 வயது நிறைந்த இரண்டு ஆடவர்கள் பயந்த நிலையில் இருந்ததை பார்த்து அக்காரை சோதனை செய்தனர்.
அச்சோதனையில் காரின் பின் இருக்கையில் 29 கிராம் கொண்ட 10 பொட்டலம் லுட் சினார் எனப்படும் ஷாபு போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். இது குறித்து விசாரணை நடத்தும்போது 25 வயது ஆடவர் பட்டர்வொர்த் பாகான் என்ற இடத்தில் நபர் ஒருவரிடம் 50 கிராம் வாங்கினோம்.
(வெள்ளிக்கிழமை) 21 கிராமை 2 ஆயிரம் வெள்ளிக்கு விற்பனை செய்து விட்டோம். அதில் மீதம் உள்ளதுதான் பறிமுதல் செய்யப்பட்ட இந்த 29 கிராம் என்று கூறினார்.
கூலிம் மாவட்ட போலீஸ் தலைமையக போதைப் பொருள் ஒழிப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் இவர்களைக் கைது செய்து மேல் விசாரணைக்காக லாக்காப்பில் தடுத்து வைத்துள்ளனர். இவர்களிடத்தில் சிறுநீர் சோதனை மேற்கொண்டபோது போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.