காதலிச்சாச்சு கல்யாணம் எப்போ?

அன்பே ஆருயிரே என்றேல்லாம் பேசி சிறப்பா காதலிச்சாச்சு,,,

ஆனாலும் இந்த கோவிட் வந்து நம்ம கல்யாணத்தையே தள்ளி போட்டுருச்சே என்ற மன விரக்தியில் இவ்வாண்டு திருமணமாகவிருந்த தம்பதிகள் கவலைப் பட்டு கொண்டு இருக்கின்றனர்.

கோவிட் உலகளாவிய பிரச்சினை. உயிரையே கொள்ளும் உயிர்க் கொல்லி நோய் அது. இந்த சமயத்தில் திருமணத்தை நடத்துவதை விடுத்து ஒத்திவைக்கலாம் என்ற மனப் பக்குவத்திற்கு பலர் வந்து விட்டனர்.

ஆனால் இன்னும் சிலர் குறித்த அதே தினத்தில் கல்யாணம் செய்ய வேண்டும் என்றும் ஒற்றை காலில் நிற்கின்றனர்.

வசதி குறைந்தவர்கள் பலர் திருமணத்தை ஒத்தி வைத்தால் இன்னும் கொஞ்சம் பணம் சேர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கின்றனர். ஆனால் சிலர் தேதி குறித்த அதே நாளில் வீட்டிலேயே தாலிக் கட்டிக் கொள்கின்றனர். அதனை வீடியோ கான்பிரன்ஸ் முலமாகவும் நடத்திக் கொள்கின்றனர். இந்தியர்களுக்கு கலாச்சாரத்திற்கு திருமணம் தள்ளி போவது ஒரு நல்ல அறிகுறி அல்ல என்று தான் பொதுவாக நினைப்பார்கள். ஆனால் இன்றைய சூழல் அப்படி இல்லை. கோவிட் கொத்து கொத்தாக உயிர்களை கொன்று குவிக்கிறது. இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கோவிட் காரணத்தால் ஆலயங்கள் மூடப்பட்டுள்ளன. பிறகு ஆலயம் திறந்தாலும் திருமணம் உட்பட ஒன்று கூடும் நிகழ்ச்சிகளை ஓராண்டிற்காவது தவிர்க்க வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. இது முற்றிலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய விஷயம் தான்.

காரணம் கூட்டம் கூடும் போது கோவிட் பரவி விட்டால் அது பலரையும் பாதிக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த கோவிட் போராட்டத்தில் நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டால் தான் அதிலிருந்து விரைந்து வெளியில் வர முடியும்.

கோவிட் காரணமாக திருமணம் நின்று போகவில்லை. தேதி தான் தள்ளி போடப்பட்டுள்ளது. ஆடம்பரமாக திருமணம் செய்ய விரும்புவோர் தேதியை தள்ளிப் போட்டு பிறகு செய்யலாம் என்று இருக்கின்றனர். ஆனால் இவ்வாண்டு ஜனவரி தொடங்கி மே மாதம் வரை திருமணம் செய்யவிருந்தவர்கள் பலர் அனைத்து ஏற்பாடுகளுக்கும் முன் பணம் செலுத்தி விட்டனர். தற்போது அது அவர்களுக்கு சில சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மண்டபங்கள், தேன் நிலவுகளுக்காக முன் பணம் செலுத்தியவர்களுக்கு பெரும்பாலான இடத்தில் பணம் திரும்ப கிடைப்பதில்லை. சில இடங்களில் பணம் திரும்ப கிடைக்காவிட்டாலும் தேதி மாற்றத்திற்கு ஒத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here