இந்திய பகுதிகளுக்கு உரிமை கொண்டாடி புதிய வரைபடம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நேபாளம், இந்தியாவுக்கு எதிராக மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளது. நேபாள நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் கேபி சர்மா ஒலி, “நேபாளத்தில் இதற்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா் யாருமில்லை. வெளியூா்களில் இருந்து வந்தவா்களால்தான் இங்கு கொரோனா பரவியுள்ளது.நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்துவது அரசுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.
தேசிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி, சட்ட விரோதமாக பலா் நேபாளத்துக்குள் ஊடுருவியதால், குறிப்பாக இந்தியாவில் இருந்து பலா் ஊடுருவியதால்தான், நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இதுமட்டுமன்றி, இந்தியாவில் இருந்து வருபவா்களை உரிய பரிசோதனைகளின்றி அழைத்து வருவதில் சில அரசியல் பிரமுகா்களும் உள்ளூா் பிரதிநிதிகளும் உடந்தையாக இருக்கிறாா்கள். சீனா, இத்தாலி வைரஸை விட இந்திய வைரஸ் மிகவும் கொடியது” என்றார்.