கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடித்துள்ள கார்த்திக் டயல் செய்த எண் குறும்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
விண்ணைத்தாண்டி வருவாயா இவரின் மாஸ்டர் பீஸ் என்றே சொல்லலாம். இப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆனாலும் இன்றளவும் பேசப்படுகிறது. அதன் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், தற்போது அதன் ஒரு பகுதியை குறும்படமாக எடுத்து வெளியிட்டுள்ளார்.
கார்த்திக் டயல் செய்த எண் என பெயரிடப்பட்டுள்ள அந்த 12 நிமிட குறும்படத்தை பார்க்கும் போது விண்ணைத்தாண்டி வருவாயா 2 எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளார் கவுதம் மேனன். சிம்பு – திரிஷா இடையே நடக்கும் செல்போன் உரையாடல்களை “கொஞ்சம் விழிப்புணர்வு… நிறைய காதலுடன்” கொடுத்துள்ளார் கவுதம் மேனன்.
குறிப்பாக இந்த குறும்படத்தின் வசனங்கள் மனமுருக வைக்கின்றன. சிம்பு கூட இந்த வசனங்களை படித்துவிட்டு கண்கலங்கியதாக சொல்லப்பட்டது. ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை இதற்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது. பார்க்க பார்க்க ரசித்துக்கொண்டே இருக்கும்படி, குறும்படத்தை அழகாக உருவாக்கியுள்ளார் கவுதம் மேனன்.