விவசாயிகளுக்கு உதவும் வாட்ஸ் அப்

கொரோனா கொள்ளை நோயை கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமலில் இருக்கிறது. இந்த ஊரடங்கால் இமாசலப் பிரதேசத்தின் வேளாண் விளைநிலங்களிலும், தோட்டங்களிலும் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. வேளாண் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்க ஊரடங்கு காலத்தை ஒரு நல்வாய்ப்பாக மாநில வேளாண் துறை பயன்படுத்தி வருகிறது.

ஊரடங்கு காலத்தில் விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்கவும், அவர்களுக்கான அறிவுறுத்தல்களை வழங்கவும் மாநில வேளாண் துறை வாட்ஸ் அப் தளத்தை பயன்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 5,676 விவசாயிகள் பதிவு செய்துகொண்டுள்ளனர். இதுகுறித்து பிராகரிதிக் கேதி குஷால் கிசான் யோஜனா திட்டத்தின் தலைமை இயக்குநரான ராஜேஷ்வர் சிங் பேசுகையில், “மாநில, மாவட்ட, தொகுதி படிநிலைகளில் மொத்தம் 94 வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட்டுளன.

விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்கவும், இயற்கை விவசாயம் குறித்து அவர்களுக்கு அறிவுரை வழங்கவும் வீடியோ அழைப்பு மூலம் அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்” என்று தெரிவித்தார். 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கீட்டின்படி, இந்தியாவிலேயே இமாசலப் பிரதேசத்தில் மட்டுமே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 89.96 விழுக்காட்டினர் கிரமப் புறங்களில் வசிக்கின்றனர்.

இமாசலப் பிரதேசத்தை பொறுத்தவரை 80 கிராமப்புற குடும்பங்களிடம் நிலம் இருக்கிறது. ஒட்டுமொத்த தொழிலாளர்களில் 69 விழுக்காட்டினருக்கு வேளாண்மை, தோட்டக்கலைத் துறைகள் வாயிலாக நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இதுவரை வாட்சப் குழுக்களில் 5,676 விவசாயிகள் இணைந்துள்ளதாக ராஜேஷ்வர் சிங் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் குறைகளை கேட்டறிதல், ஊரடங்கு காலத்தில் அவர்களுக்கு ஆதரவளிப்பது, பயிர் பாதுகாப்பு குறித்து அறிவுரை வழங்குவது போன்றவற்றை திறம்பட கையாள வாட்சப் பயன்படுத்தப்படுகிறது.

குறைந்த செலவில் இயற்கை விவசாயம் செய்வதை ஊக்குவிக்க பிராகரிதிக் கேதி குஷால் கிசான் யோஜனா திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் மாநிலம் முழுவதும் 54,000 விவசாயிகள் இணைந்துள்ளனர். தனிநபராகவும், சுய உதவிக் குழுக்கள் மூலமாகவும் காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களை இயற்கை முறையில் உற்பத்தி செய்ய இத்திட்டம் உதவுகிறது. இத்திட்டத்தின் கீழ் 70,000 விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை பற்றி பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. தற்போது இமாசலப் பிரதேசத்தில் 2,151 ஹெக்டேர் பரப்பளவில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here