மலேசியா என்றால் பூர்வக்குடியினர் இல்லாமல் எப்படி? கொரோனா தொற்றின் காலத்தில் அவர்கள் பற்றிய செய்திகள் அதிகமாக இல்லை என்பதை விட, செய்திகளே இல்லையென்றுதான் கூறவேண்டும்.
அப்படியானால் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதாகத்தானே பொருள்படுகிறது. அவர்களுக்குக் கொரோனா இல்லையென்பதில் ஆச்சரியமில்லை. காரணம் அவர்கள் வாழும் இடம் மருதம் சார்ந்த இடம். பசுமை நிறைந்த இடம். இப்படித்தான் ஒரு காலத்தில் இருந்தது. இப்போது குறைந்துவிட்டது.
முன்னேற்றங்களில், சலுகைகளில் அவர்களுக்கும் பங்குண்டு. ஆனால் மூன்னேறியிருக்கிறார்களா என்பதுதான் இன்றைய கேள்வி.
பூர்வக்குடியினர் இன்னும் முறையான, முழுமையான கல்வியறிவுக்கு மாறவில்லை மாற்றுகின்ற அழுத்தமும் அரசுக்கு இல்லை என்பதுதான் உண்மை. நாட்டின் நடப்புகள் பற்றிய கவலை அவர்களுக்கு அதிகம் இல்லை. நாட்டை எவர் ஆண்டாலும் அது அதுபற்றியும் அவர்கள் கவலைப்பட்டதில்லை. கவலைப்படப்போவதுமில்லை. அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியதும் கிடைக்கவில்லை என்றாலும் அதுபற்றியும் அவர்கள் அக்கறை கொள்வதில்லை. கிடைப்பது மட்டுமே அவர்களுக்கானது என்ற நம்பிக்கையுள்ளவர்கள்
குறிப்பாக இவர்கள் சார்ந்திருக்கும் ஜாக்கோஆ துறை இவர்கள் மீது அதிக நாட்டத்துடன் செயல்படுகிறது என்பதில் இன்னும் போதிய திருப்தி இல்லை. பூர்வக்குடியினர் விடுபட்டுவிடக்கூடாதே என்ற கரிசனம் மட்டுமே தெரிகிறது. அவர்களின் முன்னேற்றம் இருபது ஆண்டுகள் பின்னோக்கியே தெரிகிறது என்றால் மறுக்கின்றவர்கள் அதிகம் இல்லை.
அண்மைய கொரோனா இடைவெளியில் இவர்களின் பெயரைப்படுத்தி இவர்களுக்கு உதவுதாக ஒரு நபர் பெயர் பதிவிடப்பட்டு வங்கியின் வழி வசூலித்திருப்பதாகத் தகவல். ஆனால், அப்படியொரு அனுமதியை ஜாக்கோஆ வழங்கவில்லை என்றும் அறியப்படுகிறது. இது ஒருதரப்பினரின் ஏமாற்றுவேலை இதுவென்றும் கூறப்படுகிறது.
ஏமாறுவதற்கும், ஏமாற்றுவதற்கும் பூர்வக்குடியினரே தகுதியானவர்கள் என்பது கதையல்ல. உண்மை. பூர்வக்குடியின ஏமாற்றப்ப்டுகிறார்கள் என்றால் தவறு எங்கே உற்பத்தியாகிறது?