சாப்பிடச் சென்ற லோரி ஓட்டுநர்; தானாக நகர்ந்து 5 வாகனங்களை நொறுக்கிய லோரி!

கோலாலம்பூர்:

காஜாங், பெர்சியாரன் டாமாய் பெர்டானா (Persiaran Damai Perdana) பகுதியில் நேற்று மதியம் ஒரு லோரி கட்டுப்பாட்டை இழந்து, தானாக நகர்ந்து ஐந்து வாகனங்கள் மீது மோதியது.

லோரி ஓட்டுநர் தனது வாகனத்தைச் சாலையோரம் நிறுத்திவிட்டு, அருகில் உள்ள உணவகம் ஒன்றிற்குச் சாப்பிடச் சென்றுள்ளார்.

ஓட்டுநர் இல்லாத நேரத்தில், அந்த லோரி திடீரென தானாக நகரத் தொடங்கி, சாலையின் இருபுறமும் நிறுத்தப்பட்டிருந்த ஐந்து வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் லோரி மோதிய அனைத்து வாகனங்களும் பலத்த சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக, இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்று, காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் நஸ்ரோன் அப்துல் யூசுப் கூறினார்.

நேற்று மதியம் சுமார் 12.45 மணியளவில் போலீசாருக்கு இது குறித்துத் தகவல் கிடைத்தது என்றும், இச்சம்பவம் குறித்து 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 43(1)-இன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் சொன்னார்.

இக்குற்றத்திற்காகக் குற்றம் சாட்டப்படுபவருக்கு 5,000 ரிங்கிட் முதல் 10,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது ஓராண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here