மணிக்கு 100 கிலோ மீட்டர் துரம் வரையில் நீந்திச் செல்லும் ஆற்றல் கொண்டது மயில் மீன்.
ஆங்கிலத்தில் ஸ்வார்ட் ஃபிஷ் (sword fish) என்று அழைக்கப்படும் இந்த மீனின் விலங்கியல் பெயர் சைபியஸ் கிளாடியஸ் ஆகும்.
கிளாடியஸ் என்றால் லத்தின் மொழியில் வாள் என்று அர்த்தம். இது சுமார் ஒன்பது அடி நீளம்வரை வளரக்கூடியது. உலகம் முழுதும் உள்ள வெதுவெதுப்பான கடற்பகுதிகளில் காணப்படும். பசிபிக், அட்லாண்டிக், ஆர்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடலில் கூட்டம் கூட்டமாகக் காணப்படும். முதுகுப்புறம் விரித்த மயில்தோகை போன்ற அமைப்பு கொண்டிருப்பதால் மயில் மீன் எனத் தமிழில் குறிப்பிடுகிறார்கள்.
இந்த மீனினத்தில் பல வகைகள் உள்ளன. 90 கிலோ வரையிலும் எடை கொண்டதாக மயில் மீன்கள் உள்ளன, நீளம் மற்றும் எடையில் பல்வேறு வேறுபாடுகள் கொண்டவையாகவும் இந்த வகை மீன்கள் உள்ளன.
1886ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி இங்கிலாந்தின் இப்ஸ்விச் கடற்பகுதியில் சென்று கொண்டிருந்த படகு ஒன்றை மயில் மீன் தாக்கியதில் போர் வீரர் ஒருவர் இறந்தார். மீன் இனங்களில் மூர்க்க குணமும் படபடப்புத் தன்மையும் மயில் மீனுக்கு அதிகமாக உள்ளது.
உயிரினங்களில் மிக வேகமாக நீந்தக்கூடியது. மணிக்குச் சராசரியாக 100 கி.மீ. வேகத்தில் நீந்தும். கடலின் மேல்பரப்பில் தாவித்தாவி நீந்தும்போது படகிலுள்ள மீனவர்களை தனது தாடையால் தாக்கி ஆழமான காயங்களை ஏற்படுத்திவிடுவதும் உண்டு. ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் மயில் மீன்களைத் தூண்டில் போட்டு பிடிப்பது மிகப் பிரபலமான பொழுதுபோக்காக உள்ளது.