அதட்டும் டிரம்ப் – அசராத டிவிட்டர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு மிரட்டல்கள் விடுத்த போதிலும் அவர் பதிவிட்ட டிவிட் ‘வன்முறையை மகிமைப்படுத்துவதாக’ இருப்பதாக கூறி டிவிட்டர் நிர்வாகம் மீண்டும் ஒருமுறை தனது அதிரடியை காட்டி உள்ளது.அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கும் டிவிட்டர் சமூக வலைதளத்திற்கும் இடையே கடந்த சில நாட்களாக பனிப்போர் முற்றி உள்ளது. இரு தினங்களுக்கு முன் தபால் ஓட்டு பற்றி டிரம்ப் பதிவிட்ட 2 டிவிட்கள் நம்பகத்தன்மை அற்றவை என டிவிட்டர் நிர்வாகம் முத்திரையிட்டு, உண்மை சரிபார்ப்பு இணைப்புகளை இணைத்தது.

இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், சமூக ஊடக இணையதளங்களுக்கு இருக்கும் சில சட்டப்பூர்வ பாதுகாப்புகளை நீக்கும் உத்தரவில் நேற்று கையெழுத்திட்டார். சமூக ஊடக தளங்களுக்கு சரிபார்க்கப்படாத அதிகாரம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கும் டிவிட்டர் அசரவில்லை. அவர் கையெழுத்திட்ட அடுத்த சில மணி நேரத்திலேயே, டிரம்ப்பின் மற்றொரு பதிவை மறைத்து அதன் மீது ‘வன்முறையை மகிமைப்படுத்துவதாக’ முத்திரையிட்டுள்ளது.கறுப்பினத்தை சேர்ந்த ஒருவரை அமெரிக்க போலீஸ் கழுத்திலேயே மிதித்து கொன்றதற்கு எதிராக போராட்டம் நடத்துவோர் மீது துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டும் என்று டிரம்ப் வெளியிட்ட பதிவு தனது நெறிமுறைகளை மீறி வன்முறையை மகிமைப்படுத்துவதாக இருப்பதாக டிவிட்டர் நிர்வாகம் கூறியுள்ளது.

மேலும், பொதுமக்கள் நலன் சார்ந்த பதிவாக இது இருக்கும் என ஏற்றுக் கொண்டு அந்த பதிவு தொடர்வதற்கு அனுமதி அளிப்பதாகவும் தனது முத்திரைக் குறிப்பில் கூறி உள்ளது. இது டிரம்ப்பை கடும் ஆத்திரமடைய செய்துள்ளது. ‘‘பொய்களை சொல்லும் சீனாவையும், அமெரிக்க எதிர்க்கட்சிகளையும் எதுவுமே செய்யாத டிவிட்டர் ஆளுங்கட்சியையும், அதிபரையும் குறிவைக்கிறது. இதை ஒழுங்குபடுத்த வேண்டும்,’’ என டிரம்ப் விமர்சித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here