கல்வி என்று வரும்போது பிள்ளைகள் கண்ணுக்குத் தெரியும். பிள்ளைகள் என்று வரும்போது பெற்றோர்கள் தெரிவார்கள். பெற்றோர்களுக்குப் பிள்ளைகள் நன்கு படிக்க வேண்டும் என்ற கவலை இருக்கும். அந்தக் கவலை இப்போது இரட்டிப்பாக மாறியிருக்கிறது. மும்மடங்காகியிருக்கிறது என்பதற்கும் கல்வி அமைச்சு மட்டுமே காரணம் அல்ல. அரசும் காரணமல்ல. பிள்ளைகளின் பாதுகாப்பும் சுகாதாரமுமே காரணம்.
எந்தப் பெற்றோரும் தம்பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு தேவையில்லை என்பார்களா? அப்படிச் செய்தால் அவர்கள் பெற்றோர்களாக இருக்க முடியுமா?
பாதுக்காப்பில்லாமல் கல்வியென்றால், அதனால் பயன் என்ன? பாதுகாப்பு என்பது முதன்மையாக இருப்பதால் கல்வி இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இது தவறல்ல . உலகமே, சும்மா இருந்தால் சுகம் என்றுதான் நினைக்கிறது. உலகச் சுகாதாரமும் அதைத்தான் கூறுகிறது.
உயிரோடு இருந்தால் கல்வியைப் பெற்றுவிடலாம். உயிர் இல்லையென்றால் கல்வி கற்பது யார்? அதனால்தான் ஆபத்து நிறைந்த இக்காலத்தில், கல்விக்கான கூடல் இடைவெளியை கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.
பெற்றோர்களின் கவலையெல்லாம் பள்ளி திறக்கப்படக் கூடாது என்பதுதான். முன்பெல்லாம் பள்ளிக்குப் போகவில்லையென்றால் குற்றமாகும். இப்போது பள்ளிக்குப்போனால் குற்றமாகும். காலத்தைப்போல கற்றுக் கொடுக்கும் ஓர் ஆசிரியன் உலகில் இதுவரை இல்லை. இனியும் வரப்போவதில்லை.எப்போதும் இருக்கப்போவதில்லை.
உலகத்தைத் திருப்பிப் போட்டது காலமா? தொற்று நோயா? காலம்தான் என்பது அறிவாளிகளின் கணிப்பு. தொற்றையும் விரட்டுவதற்கு காலம்தான் கணக்கிடப்படுகிறது. ஆகவே. பள்ளி திறக்கும் காலத்தைத் தொற்றுபயம் நீங்கிய நாளில் அறிவியுங்கள் என்பது பேற்றோர்களின் கூற்று.
பேற்றோர் கூற்றில் பிள்ளைகள் குறித்த பயம் இருக்கிறது. பிள்ளைகள் எந்தப்பயமும் இல்லாமல் வீட்டில் இருக்கிறார்கள்.
ஆறாம், ஐந்தாம் படிவ மாணவர்கள் முதலில் செல்வ அனுமதிக்கப்படுவர் என்பதிலும் அச்சம் இருக்கிறது. ஆனாலும் பரவாயில்லை என்கிறது கல்வியமைச்சு. கூடுதல் மாணவர்கள் இருந்தால் எப்படி கையாளப்போகிறார்கள் என்பதும் பிரச்சினைதான். ஆனால், கூடல் இடைவெளிக்கு மாறவேண்டும். அதிக மாணவர்கள் இருந்தால் கூடுதல் வகுப்பறைகளும் அசிரியர்களும் தேவை.