உத்தரவை மீறியதாக ஐவர் மீது குற்றச்சாட்டு

ஈப்போ –

நிபந்தனையுடன் கூடிய பொதுமக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறியதாக தொழிற்சங்கவாதிகள் ஐவர் மீது ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று குற்றஞ்சாட்டப்பட்டது.

அரசு மருத்துவமனைகளில் துப்புரவுத் தொழிலாளர்கள் உரிமைக்காக இவர்கள் ஈப்போ ராஜா பெர்மைசுரி பைனுன் மருத்துவமனைக்கு முன்புறம் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்போது அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

மருத்துவமனைத் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் எம். சரஸ்வதி (வயது 67), தொழிற்சங்க அதிகாரிகள் எல். தனலெட்சுமி (வயது 35), பி. சந்திரன் (வயது 52), பிஎஸ்எம் கட்சி உறுப்பினர் பி. ஜோதி (வயது 61), பிஎஸ்எம் கட்சித் தொண்டர் சி. சுப்பிரமணி (வயது 60) ஆகியோர் மீதே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

மாஜிஸ்திரேட் நூர் அஸ்ரின் லியானா முகமட் டாருஸ் முன்னிலையில் தமிழில் கூட்டாகக் குற்றப் பத்திரிகை வாசிக்கப்பட்டது. ஐவரும் குற்றச்சாட்டை மறுத்தனர்.
தொற்றுப் பாதிப்புள்ள பகுதியில் சமூக நோக்கத்திற்காக ஒன்றுகூடியதாக இவர்கள் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

2020 தொற்றுநோய் தடுப்புக் கட்டுப்பாட்டுச் சட்டம் பிரிவு 7 (1) கீழ் இவர்கள் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர். இதே சட்டத்தின் பிரிவு 15 (1) கீழும் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 1,000 வெள்ளி அபராதம் அல்லது 6 மாதங்கள் வரை சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்குத் தலா 1,000 வெள்ளி பிணை விதிக்கப்பட வேண்டும் என்று டிபிபி கே. டரிணி நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார். எனினும் ஐவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கே. குணசேகரனும் கே.எஸ். பவானியும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். பணம் செலுத்தப்படாத பிணை இவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று குணசேகரனும் பவானியும் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டனர்.

கைதான ஐவரும் நிலையான வருமானம் பெறக்கூடியவர்கள் அல்லர் எனவும் குடும்ப உறுப்பினர்களையும் பொது நடவடிக்கைகள் மூலம் கிடைக்கும் நன்கொடைகளையும் இவர்கள் சார்ந்திருக்கின்றனர் என்றும் வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்த ஐவரும் பொதுத் தொண்டூழியர்கள். சமுதாயத்தில் இவர்களுக்கு நல்ல பெயர் உள்ளது. அது மட்டுமன்றி இவர்கள் மீது எந்தவிதமான குற்றப் பதிவும் இல்லை என்று பவானி எடுத்துரைத்தார்.

ஒரு நல்ல நோக்கத்திற்காகத்தான் இவர்கள் மருத்துவமனையில் திரண்டனர் என்று வழக்கறிஞர் குணசேகரன் வாதிட்டார். மருத்துவமனை துப்புரவுப் பணியாளர்கள் சார்பில் அவர்களின் முதலாளியிடம் ஒரு மகஜரைச் சமர்ப்பிக்கத்தான் அவர்கள் அங்கு சென்றனர் எனவும் குணசேகரன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

எனினும் மாஜிஸ்திரேட் நூர் அஸ்ரின் லியானா, ஐவருக்கும் தலா 1,000 வெள்ளி தனிநபர் பிணை அனுமதித்தார். இந்த வழக்கு விசாரணையை ஜூலை 9ஆம் தேதிக்கு அவர் நிர்ணயித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here