ஜார்ஜ் பிளாய்டு கொலைக்கு நீதி கேட்டு 12 நாட்களைக் கடந்தும் தொடரும் போராட்டம்

அமெரிக்காவில் மின்னியாபொலிஸ் நகரில் கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு என்பவர் வெள்ளை இன போலீஸ் அதிகாரிகள் பிடியில் கடந்த மாதம் 25-ம் தேதி கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்கா போன்ற ஒரு வளர்ந்த நாட்டில் இன்னமும் இப்படி நிறவெறியா என்று உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இதற்கிடையே, நேரத்தை வீணடிக்காதீர்கள். போராட்டக்காரர்களை அடக்கி ஒடுக்குங்கள், இந்த போராளிகளை நாய்கள், திருடர்கள் என்று அதிபர் டிரம்ப் கூறினார். டிரம்பின் இந்த பேச்சும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஜார்ஜ் பிளாய்டு கொலைக்கு நீதி கேட்டு, அமெரிக்காவில் விடிய விடிய வன்முறை போராட்டங்கள் நடந்து வருகின்றன. போராட்டத்தைக் கட்டுப்படுத்த அரசு எவ்வளவோ முயற்சித்தும் போராட்டக்காரர்கள் ஓய்ந்தபாடில்லை.

அமெரிக்கா மட்டுமின்றி, ஐரோப்பிய நகரங்களிலும் போராட்டம் வலுத்துள்ளது. ஆஸ்திரேலிய தலைநகர் கேன்பராவிலும் போராட்டம் நடைபெற்றுள்ளது.

ஜார்ஜ் பிளாய்டு கொலைக்கு நீதி கேட்டு அமெரிக்காவில் 12 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அதிகபட்சமாக நேற்று ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது. அதிகாரிகளும் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளனர்.

தலைநகர் வாஷிங்டனில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்ட தெருக்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மற்ற முக்கிய நகரங்களிலும் அமைதி வழியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால் போராட்டக்காரர்களில் பலர் மாஸ்க் அணிந்திருந்தனர்.

போராட்டம் தொடங்கி 12 நாட்களாகியுள்ள நிலையில் வன்முறை சற்று தணிந்து அமைதிவழி போராட்டங்கள் அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here