நைஜீரியாவில் ஒரே நகரத்தில் 40 பெண்கள் பலாத்காரம்: குற்றவாளி கைது

போகோஹரம் இயக்க பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிற நைஜீரியா நாட்டில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்படுவது தொடர்கதை ஆகி வந்தது. இது நாடு முழுவதும் பெரும் சலசலப்புக்கு வழிவகுத்தது. ‘வீ ஆர் டயர்ட்’ (நாங்கள் சோர்ந்து விட்டோம்) என்ற பெயரில் ‘ஹேஷ்டேக்’கை உருவாக்கி மக்கள் அனைவரும் ஆவேசத்துடன் கருத்துகளை தெரிவித்தனர்.

இந்த நிலையில் அங்கு கானோ மாகாணத்தில் டங்கோரா என்ற நகரத்தில் ஒரே ஆண்டில் அடுத்தடுத்து 40 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்ப்பட்டது, பெண்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. நிம்மதி இழக்க வைத்தது. இப்போது அந்த கொடூரச்செயல்களை நடத்தி வந்த குற்றவாளி பிடிபட்டுள்ளான்.

அவன் 10 வயது சிறுமிகள் தொடங்கி 80 வயது பாட்டி வரையிலான பெண்களை பலாத்காரம் செய்திருப்பது தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த குற்றவாளி, அங்குள்ள ஒரு வீட்டில் புகுந்து பெண் குழந்தைகளின் படுக்கை அறைக்கு சென்றபோது, அந்தக் குழந்தைகளின் தாயார் அவனை துணிச்சலுடன் மடக்கிப்பிடித்து போலீசாரை வரவழைத்தார். அங்கு விரைந்த போலீசார் அவனை கைது செய்தனர்.

அவன் கைது செய்யப்பட்டிருப்பதை அந்த நகர தலைவர் அகமது யாவ் வரவேற்றார். “டங்கோரா மக்கள் இப்போது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சரியான வகையில் நீதி வழங்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்” என அவர் கூறினார்.

உள்ளூர் மக்கள் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “கடந்த ஒரு வருடமாக நாங்கள் எங்கள் சொந்த வீடுகளிலேயே அச்சத்துடன் வாழ்ந்து வந்தோம். தொடர் கற்பழிப்பு குற்றவாளி வேலி தாண்டி உள்ளே வந்து பெண்களை பலாத்காரம் செய்தது எங்களுக்கு அச்சத்தை அளித்தது. இனி நாங்கள் நிம்மதியாக தூங்க முடியும்” என கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here