கோவிட் எண்ணிக்கையை வெற்றிகரமாகக் குறைத்திருக்கும் நாடுகளில் மலேசியா உலக அரங்கில் பேசப்படும் நாடாக மாறிவிட்டது. இதற்காகவாவது கொரோனாவுக்கு நன்றிசொல்ல வேண்டும். எதிரிக்கு நன்றி சொல்வது தவறல்ல.
முன்பெல்லாம் ஒரு வார்த்தை அடிக்கடி பேசபட்டது நினைவிருக்கலாம். மலேசியா போலே என்ற வார்த்தைதான் அது. ஒரு நல்லது இருந்தால் கெட்டது நிழலாக வந்துவிடும். அதுபோலத்தான் மலேசியா போலே (MALAYSIA BOLEH) என்ற வார்த்தைக்கும் எதிர்ச்சொல் ஒன்று முளைத்தது, மலேசியா தா பொலெ என்று எதிராகக் கிளைப்பினார்கள். அது தோற்றுவிட்டது. கெட்டவை வாழும் காலம் குறைவு என்பது தீர்ப்பு.
இன்று மலேசியா போலே என்ற சொல் உயிர்பெற்றிருக்கிறது. மலேசியர்களால் முடியும் என்ற சொல் மிக அழுத்தமாக, உச்சக்குரலில் ஒலிக்கிறது. கொரோனா இதற்குக் காரணம் என்றாலும் வில்லன்கள் வாழ்ந்ததாக வரலாறு இல்லை. அண்மைக்கால ஹிட்லரும், இடி அமீனும் இன்னும் பலரும் காணாமல் போனார்களே!
சினிமா கதைகளும் இப்படித்தான் முடிகின்றன. நன்மைகள் ஓங்கும் என்பதும் தர்மம் வாழும் என்பதும் நிலவின் சுற்றுப்பாதைபோல் நியதி வழுவாமல் இயங்கக்கூடியவை
மலேசியாவின் புகழைப் பரப்ப கோரோனா உதவியிருக்கிறது. கொரோனாவுக்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்க வில்லை. மருந்தின் பயன்பாட்டுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் ஆகும் என்று சிங்கப்பூர் பிரதமரும் கூறியிருக்கிறார். அப்படியிருந்தும் மலேசியா கொரொனாவை ஒழிக்க முனைந்து பெயர் பதித்திருக்கிறது. ஒழிப்பு இன்னும் தொடர்கிறது. கட்டுப்படுத்துவதில் உலக ஏட்டில் பெயர் பதித்திருக்கிறது. இதற்கெல்லாம் மலேசிய சுகாதாரத்துறையே காரணம். அதன் முன்னணிப் பணியாளர்களின் ஆளுமையும் அயராத தியாகங்களுமே காரணம்.
மலேசியா என்றால் சாதிக்க முடியும் என்றும் ஓர் அர்த்தம் பதிவாகியிருக்கிறது. மருத்துவத்தில் மலேசியா புகழ் பெற்றுவருகிறது. இன்னும் துறைகள் வரிசைப்பிடித்து நிற்கின்றன. வெற்றி ஒன்றுதான் லட்சியம்.