அந்நியர்களின் வணிக ஆதிக்கம் இன்னும் ஓய்ந்ததாகத் தெரியவில்லை. மூலை முடுக்கெல்லாம் அவர்களின் நடமாட்டம் மூச்சுத்திணற வைக்கிறது. காலணியிருந்து முகக்கவசம் வரை அவர்களின் நடமாட்டம் இல்லாமல் இல்லை.
அவர்களின் துணிச்சலும் வணிக முயற்சியும் மிகுந்த பாராட்டுக்குரியவை. அவர்களின் உழைக்கும் நோக்கத்திற்குத் தலைவணங்கித்தான் ஆகவேண்டும். மலேசியர்களில் இந்திய மக்களுக்கு அத்துணிச்சல் வருவதில்லை. அவர்களைப்போல் தெரு வியாபாரம் செய்ய இந்தியர்கள் முன்வருவதேயில்லை,
இதற்குக்குக் காரணம் என்ன? காரணங்கள் பல இருக்கின்றன. அதில் முக்கியமாக நாட்டமில்லை, அழுக்குப் படாமல் உழைக்க வேண்டும் என்பதுதான். மற்றவர்கள் ஏளனமாகப் பார்ப்பார்கள் என்ற தவறான சிந்தனைதான்.
சீனர்களும் மலாய்க்காரர்களும் அப்படியில்லை. வாழ்க்கையில் உயர்மட்டத்திற்கான சிந்தனையில் அவர்களின் தொழில் விரிவடைந்திருக்கின்றன. மின்சாரத் தளவாட விற்பனையில் சீனர்களின் இடத்தை மலாய்க்காரர்கள் பற்றிக்கொண்டனர். சீனர்கள் இருப்புத் தொழில்களையும் செய்வதில்லை. கரும்புத் தொழில்களையும் செய்வதில்லை. அவர்களின் தொடுதல் எல்லாம் அனைத்துலகம் என்று ஆகிவிட்டது.
மிகவும் உயர் மட்ட நிலைக்கு மாறி, அதிலிருந்து இன்னும் உயர் நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் காலியாக்கிய தொழில்கள் காலியாக இல்லை. அதில் இந்தியர்கள் இல்லை.
நமக்குத்தொழில் முன்னேற்றம் இல்லாதபோது எதைச் செய்வது என்ற இடைவெளியில் அந்நியர்கள் நடமாடும் தொழில்களில் ஆதிக்கம் செலுத்திவிட்டனர். அதிலிருந்து அடுத்த கட்டமாக கடை வைத்தும் மினி மார்க்கெட், மின்சாரம், கைப்பேசிகள் கடை என்றெல்லாம் அக்கிரமிப்பு செலுத்திவிட்டனர்.
இப்போதுதான் அது சட்டத்திற்குப் புறம்பானது என்று தெரிகிறதா என்பதுதான் பலரின் கேள்வியாக இருக்கிறது. அவர்கள் வெளியேற்றப்படும்போது அத்தொழில்களின் காலி இடத்தை இந்தியர்கள் ஏற்பார்களா?