அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையே முன் எப்போதும் இல்லாத வகையில் நல்லுறவு நிலவுகிறது. பிரதமர் மோடிக்கும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது. கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்கு தெரியாத எதிரியை ஒழித்துக்கட்டுவதில் அமெரிக்காவும், இந்தியாவும் ஒத்துழைத்து வருகின்றன.
அதேபோன்று, இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வென்டிலேட்டர்களுக்கு (செயற்கை சுவாச கருவிகளுக்கு) தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தியாவுக்கு இதில் அமெரிக்கா உதவ முன்வந்தது. இதையொட்டி கடந்த மாதம் டுவிட்டரில் பதிவிட்ட டிரம்ப், இந்தியாவில் உள்ள நண்பர்களுக்கு, கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரசை வீழ்த்துவதில் உதவும் வகையில் அமெரிக்கா வென்டிலேட்டர்களை நன்கொடையாக வழங்கும். இதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்க அதிகாரி ஒருவர் கடந்த மாதம் இதுபற்றி பேசுகையில், கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு உதவும் விதத்தில் அமெரிக்கா 200 வென்டிலேட்டர்களை நன்கொடையாக வழங்க திட்டமிட்டிருக்கிறது என கூறினார்.
அதுமட்டுமின்றி அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட் அமைப்பு, இந்தியா கொரோனாவை எதிர்த்து போராடுவதற்காக 5.9 மில்லியன் டாலர் (சுமார் ரூ.44¼ கோடி) நிதி உதவியை அறிவித்தது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்கவும், அத்தியாவசிய சுகாதார வசதிகளை கவனிக்கவும் ஒதுக்கிய 2.9 மில்லியன் டாலர் (சுமார் ரூ.21¾ கோடி) அடங்கும்.
அதன்படி, அமெரிக்கா நன்கொடையாக வழங்கும் வென்டிலேட்டர்களின் முதல் தொகுதி நேற்று முன்தினம் இந்தியா வந்து சேர்ந்தது. இந்த தரம்வாய்ந்த வென்டிலேட்டர்களை அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தை சேர்ந்த சோல் மெடிக்கல் கார்ப்பரேஷன் தயாரித்து அளித்துள்ளது.
இந்த தகவலை யு.எஸ். எய்ட் அமைப்பின் நிர்வாகி ஜான் பர்சா தெரிவித்துள்ளார்.
இந்த வென்டிலேட்டர்களை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர், டெல்லியில் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.கே. ஜெயினிடம் நேரில் ஒப்படைத்தார். இதற்காக அமெரிக்காவுக்கு இந்திய செஞ்சிலுவை சங்கம் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டது.
இதுபற்றி அந்த அமைப்பு கூறும்போது, “கொரோனா வைரசுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு இந்த வென்டிலேட்டர்கள் உதவும். இந்த தொற்றுநோயின்போது, பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உயிர்காக்கும் இந்த சாதனம் பயன் அளிக்கும்” என கூறியது.