சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இன்று காலை சுமார் 10.30 மணியளவில் காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. காவல் நிலைய கட்டுபாட்டு அறைக்கு போனில் இந்த தகவலை தெரிவித்த மர்ம நபர், வேறு எந்த விவரங்களையும் செல்லாமல் தொடர்பை துண்டித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு காவல்துறையினர் 4 வெடிகுண்டு நிபுணர்கள், 2 மோப்ப நாய்களுடன் சென்று தீவிர சோதனை நடத்தினர். ரஜினிகாந்தின் வீடு அமைந்துள்ள பகுதிக்கு அருகில் உள்ள அனைத்து இடங்களிலும் சுமார் 1 மணி நேரம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையில் வெடிபொருட்கள் எதுவும் சிக்காததால், காவல்துறைக்கு கிடைத்த தகவல் பொய்யானது என்று போலீசார் உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு போன் செய்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.