அமலுக்கு வந்தது சென்னையில் முழு ஊரடங்கு

மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்த போதிலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக 5ஆவது கட்டமாக வருகிற 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு காலத்திலும் தமிழகத்தில் கொரோனா பரவும் வேகம் குறையவில்லை. நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்தபடி இருக்கிறது. குறிப்பாக சென்னையிலும், அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் கொரோனா பரவல் அபாய கட்டத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கடந்த 15ஆம் தேதி சந்தித்த மருத்துவ நிபுணர் குழுவினர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்றால், ஊரடங்கை கடுமையாக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அன்று மாலையில் அமைச்சரவையை கூட்டி ஆலோசித்த எடப்பாடி பழனிசாமி, இந்த 4 மாவட்டங்களிலும் 19ஆம் தேதி (இன்று) முதல் வருகிற 30ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை, 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி சென்னை நகரிலும் அதையொட்டி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அமைந்துள்ள புறநகர் பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.

தற்போது, பல்வேறு தளர்வுகளுடன் தமிழகம் முழுவதும் 5ஆவது கட்டமாக ஊரடங்கு தொடர்ந்து கொண்டிருந்தாலும், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தளர்வுகள் விலக்கிக் கொள்ளப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள் செயல்படவும், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்திகள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும், மருத்துவ தேவைகளுக்கு மட்டும் தனியார் வாகனங்கள், ஆட்டோ, டாக்சி போன்றவற்றை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

பொதுமக்கள் பிற இடங்களுக்கு மோட்டார் சைக்கிள், கார்களில் செல்ல முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்க விரும்பும் மக்கள், தங்கள் பகுதிகளில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் கடைகளுக்கு நடந்து சென்று வாங்கிக்கொள்ள மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஓட்டல்களில் உணவு வாங்கி சாப்பிட விரும்புபவர்கள் தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீட்டுக்கே உணவை வரவழைத்து வாங்கிக்கொள்ளலாம். உணவுப் பொருட்களை கொண்டு செல்லும் ஊழியர்கள், தாங்கள் பணிபுரியும் நிறுவனத்திடம் இருந்து உரிய அடையாள அட்டையை பெற்று, வைத்திருக்க வேண்டும்.

சரக்கு வாகனங்கள், தண்ணீர், பால், பெட்ரோல், கியாஸ் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள், தங்கள் நிறுவனத்திடம் இருந்து அடையாள அட்டை, அனுமதிச் சீட்டு மற்றும் உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். அதேபோல், நாளை (சனிக்கிழமை) முதல் 26ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வங்கிகள் சார்ந்த வாகனங்களும், வங்கி ஊழியர்களும், தங்களது வங்கியின் அடையாள அட்டையை காண்பித்து செல்லலாம்.

ஊரடங்கு காலத்தில் வரும் 2 ஞாயிற்றுக்கிழமைகளில், அதாவது 21 மற்றும் 28 ஆம் தேதிகளில் எந்த தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். அன்றைய தினங்களில், கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருக்கும். மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து நடமாடவே தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அந்த 2 நாட்களில், பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக்கடைகள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி தவிர, எந்தவிதமான வாகன போக்குவரத்துக்கும் அனுமதி கிடையாது. மருத்துவ தேவைகளுக்கு மட்டும் தனியார் வாகனங்கள், ஆட்டோ, டாக்சி போன்றவை அனுமதிக்கப்படும். தங்களிடம் உள்ள அனுமதி சீட்டு மற்றும் அடையாள அட்டைகளை ‘ஏ 5’ அளவு தாளில் ஜெராக்ஸ் எடுத்து வைத்திருக்க வேண்டும்.

விமானம் மற்றும் ரெயில்களில் பயணிக்க செல்பவர்கள், தங்களது பயணச் சீட்டை கையில் வைத்திருக்க வேண்டும். எந்தவிதமான அனுமதி சீட்டும் இன்றி வாகனங்களில் சுற்றித்திரிபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க இருக்கின்றனர். அவர்களுடைய வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், போலியான அனுமதி சீட்டுடன் செல்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.

அதே நேரத்தில், முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் இல்லங்கள், வீட்டில் தங்கியிருக்கும் முதியோர் மற்றும் நோயாளிகளுக்கு உதவி புரிவோர் மற்றும் அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவன ஊழியர்களுக்கும் வாகன அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் இ-பாஸ் இணையதளத்தில் விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 15-ந் தேதி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்தே, பலர் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர். நேற்று முன்தினமும், நேற்றும் சென்னையில் இருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. செங்கல்பட்டு மற்றும் விழுப்புரத்தில் சோதனைசாவடிகள் அமைத்து கண்காணித்து வரும் போலீசார், உரிய ஆவணங்கள் இல்லாமல் சென்றவர்களை திருப்பி அனுப்பினார்கள். இதனால் அந்த பகுதிகளில் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு கொரோனா பரவி விடக்கூடாது என்பதற்காக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் பல அடுக்கு சோதனைகளை தொடங்கி உள்ளனர். இதற்காக 400 இடங்களில் சோதனைசாவடிகளை அமைத்து உள்ளனர். ஊரடங்கு பாதுகாப்பு பணியில் 20 ஆயிரம் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். முழு ஊரடங்கை யொட்டி சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கொரோனாவை தடுக்க அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு சென்னையில் தீவிரமாக அமல்படுத்தப்படும். இது தொடர்பாக முதல்-அமைச்சரும், அரசும் அறிவித்துள்ள வழிமுறைகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் பொருட்களை வாங்க வாகனங்களில் செல்லக்கூடாது. அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்களை வாங்க வேண்டும். மீறி வாகனங்களில் சென்றால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

பணிக்கு செல்லும் 33 சதவீத மத்திய-மாநில அரசு ஊழியர்கள் உரிய அடையாள அட்டையை காண்பித்தால் அனுமதிக்கப்படுவார்கள். அடையாள அட்டையை கழுத்தில் தொங்க விட்டால் நல்லது. வெளியூர் செல்ல கண்டிப்பாக ‘இ-பாஸ்’ வாங்க வேண்டும். பழைய ‘இ-பாஸ்’ வைத்திருப்பவர்கள் அதை முறையாக புதுப்பித்து பயன்படுத்தி கொள்ளலாம். போலியாக ‘இ-பாஸ்’ தயாரித்து பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னையில் அண்ணாசாலை போன்ற முக்கியமான சாலைகள் ஊரடங்கையொட்டி மூடப்படும். அந்த சாலைகளில் ஆம்புலன்ஸ் போன்ற அத்தியாவசிய சேவைக்காக செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். காமராஜர் சாலை போன்ற ஒரு சில சாலைகளில் கடந்த முறை மேற்கொண்ட நடைமுறை பின்பற்றப்படும். பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க ‘டிரோன் கேமராக்கள்’ பயன்படுத்தப்படும்.

சென்னை நகர எல்லையை தாண்டி பணிக்கு செல்லும் ஊழியர்கள் தினசரி சென்றுவர அனுமதி இல்லை. வேலை பார்க்கும் நிறுவனத்தில் அவர்கள் தங்கிக்கொள்ள வேண்டும். தனியார் நிறுவன காவலாளிகள் உரிய சீருடை அணிந்து சென்றால் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here