பிரபல பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார்

பிரபல பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் சென்னையில் இன்று காலமானார்.  தென்னிந்தியாவின் பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவரான ஏ.எல்.ராகவன் முதுமை காரணமாக காலமானார்.

1950களில் இருந்து 1970கள் வரை தமிழ் திரைப்படங்களில் பல பாடல்களை இவர் பாடியுள்ளார்.

இவரது மனைவி பிரபல நடிகை எம். என். ராஜம் ஆவார். ஏ.எல். ராகவன் எங்கிருந்தாலும் வாழ்கசீட்டுக்கட்டு ராஜாஎன்ன வேகம் நில்லு பாமாஅங்கமுத்து தங்கமுத்து உள்ளிட்ட பல பாடல்களால் நன்கு அறியப்பட்டவர்.

சௌராட்டிர சமூகத்தைச் சேர்ந்த ஏ.எல்.ராகவன் அதே சௌராட்டிர சமுகத்தைச் சேர்ந்த பிரபல பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரரா ஜனுடன் இணைந்து கல்லும் கனியாகும் திரைப்படத்தை 1968ஆம் ஆண்டு தயாரித்து அதில் கதநாயகனாகவும் நடித்திருந்தார்.

பிரபல பாடல்கள் அடங்கிய அப்படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து 1980 ஆம் ஆண்டு கண்ணில் தெரியும் கதைகள் திரைப்படத்தை சொந்தமாகத் தயாரித்து ஐந்து பிரபல இசையமைப்பாளர்களை ஒன்றிணைத்து பாடல்களை வழங்கி புதுமையான முயற்சியை மேற்கொண்டிருந்தார்.

நான் உன்ன நெனச்சேன் நீ என்ன நெனச்சே என்ற பிரபல பாடல் ஆக்கம் பெறவும் இசையமைப்பாளர் சங்கர் கணேசுக்கு இவர் உறுதுணையாக இருந்தார்.

ஒவியம் சிரிக்குது(பாஞ்சாலி), ஒரு முறை பார்த்தாலே போதும், எங்கிருந்தாலும் வாழ்க, வாழைத்தண்டு போல உடம்பு அலேக் போன்ற பாடல்களால் இவர் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

1947ஆம் ஆண்டு கிருஷ்ண விஜயம் என்ற திரைப்படத்தின் மூலம் இவர் நடிகராக அறிமுகமானார். விஜயகுமாரி திரைப்படத்தில் குமாரி கமலாவுக்கு பெண் குரலில் பாடி இவர் பின்னணிப் பாடகராக இசையமைப்பாளரும் பின்னணிப் பாடகருமான சி.எஸ்.ஜெயராமனால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

2014ஆம் ஆண்டு இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையில் நல்லா கேட்டுக்க பாடம் என இவர் பாடியது இவரது இறுதிப் பாடலாக அமைந்தது. 81 வயதான இவர் சமீப காலமாக உடல் நலமின்றி முதுமை காரணமாக இயற்கை எய்தினார்.

வருவாய் என நான் தனிமையில் இருந்தேன்

வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்

துணைவரைக் காக்கும் கடமையும் தந்தாய்

தூயவளே நீ வாழ்க என்ற வரிகள்

ஏ.எல்.ராகவன் புகழை இசைத்துக் கொண்டே இருக்கும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here