பிபியூஎம்-மில் வரலாற்றுச் சாதனை: கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து புதிய அறுவை சிகிச்சை அறை!

கோலாலம்பூர், ஜனவரி 6:

மலேசிய மருத்துவ வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, கடந்த நவம்பர் 25-ஆம் தேதி மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் (PPUM), நான்கு மாதக் குழந்தைக்குக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டது.

6.2 கிலோ எடை மட்டுமே கொண்ட அந்த ஆண் குழந்தை, மலேசியாவிலேயே மிகக் குறைந்த வயதில் இத்தகைய சிக்கலான அறுவை சிகிச்சையைப் பெற்ற நோயாளி என்ற சாதனையைப் படைத்துள்ளது.

இச்சாதனையைத் தொடர்ந்து, குழந்தைகளுக்கான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிக்கலான மருத்துவப் பணிகளை வலுப்படுத்த, பிபியூஎம்-மில் பிரத்யேக அறுவை சிகிச்சை அறை ஒன்று கூடுதலாக அமைக்கப்படும் என மலாயா பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் நூர் அஸுவான் அபு ஒஸ்மான் அறிவித்துள்ளார்.

திடீர் கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட அக்குழந்தைக்கு, அதன் தாயின் கல்லீரலின் ஒரு பகுதி தானமாக வழங்கப்பட்டு இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அறுவை சிகிச்சை அறைக்கு கொண்டு செல்லப்படும் முன்பே குழந்தை மயக்கமடைந்த நிலையில், மருத்துவர்களின் விடாமுயற்சியால் அக்குழந்தை உயிர் பிழைத்தது.

இந்த மகத்தான வெற்றிக்காக உழைத்த அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள் மற்றும் செவிலியர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ள துணைவேந்தர், இந்த வெற்றி மலேசியாவின் மருத்துவத் தரம் உலகத் தரத்திற்கு நிகரானது என்பதற்குச் சான்றாகும் என்றும், இது தேசிய உறுப்பு மாற்று திட்டத்திற்குப் பெரும் ஊக்கமாக அமையும் என்றும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here