77 வெள்ளிக்கு குறைவாக கட்டணம் செலுத்துவோருக்கு 3 மாதம் இலவச மின்சாரம்

பொதுமக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு (எம்சிஓ) காலத்தில் மின்சாரக் கட்டணம் மிகவும் அதிகாமாக இருக்கிறது என முறையிட்ட மலேசியர்களின் சுமையை குறைக்க பந்துவான் பிரிஹாத்தின் எலக்ட்ரிக் என்னும் உதவித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் இத்திட்டத்திற்கு அங்கீகாரம் அளித்துள்ளார். தீபகற்ப மலேசியாவில் உள்ள 7.66 மில்லியன் வீடுகளின் பயனீட்டாளர்கள் இத்திட்டத்தின் கீழ் நன்மை அடைவார்கள் என்று எரிசக்தி, இயற்கை வளத்துறை அமைச்சர் டத்தோ டாக்டர் ஷம்சுல் அனுவார் நசாரா கூறினார்.

இத்திட்டத்தின் கீழ் குடியிருப்புப் பிரிவைச் சேர்ந்த 52.2 விழுக்காட்டினர் அல்லது 40 லட்சம் பயனீட்டாளர்கள் மாதம் 77 வெள்ளிக்கும் குறைவாக மின்சாரக் கட்டண பில்லை பெறும் பட்சத்தில் அல்லது மாதம் 300 கிலோ வாட்டுக்கும் குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தும் பட்சத்தில் அவர்கள் இவ்வாண்டு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கு இலவச மின்சாரத்தைப் பெறுவார்கள்.

குடியிருப்புப் பிரிவவில் மாதம் 300 கிலோ வாட்டுக்கும் அதிகமான மின்சாரத்தைப் பயன்படுத்துவோருக்கு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களுக்கான மின்சாரக் கட்டணத்தில் மாதம் 77 வெள்ளி என்னும் விகிதத்தில் 231 வெள்ளி கழிவுத் தொகை பெறுவார்கள் என்று அமைச்சர் கூறினார்.

ஏற்கெனவே ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டணக் கழிவுத் தொகையோடு இந்த பந்துவான் பிரிஹாத்தின் எலக்ட்ரிக் கீழ் வழங்கப்படும் கழிவுத் தொகையும் சேர்க்கப்படும். ஜூலை மாத மின் கட்டண பில்லில் இது குறிப்பிடப்படும். மூன்று மாதங்களுக்கான மின் கட்டண பில்லை செலுத்தி விட்டவர்கள், தங்களின் ஜூலை மாத பில்லில் அத்தொகை கிரேடிட் செய்யப்பட்டிருப்பதைக் காணலாம் என்று அவர் சொன்னார்.

601 கிலோ வாட்டுக்கும் 900 கிலோ வாட்டுக்கும் இடையே மின்சாரத்தைப் பயன்படுத்தி 232 வெள்ளி 35 காசுக்கும் 395 வெள்ளி 60 காசுக்கும் இடையே மின் கட்டண பில்லை பெறுவோருக்கு கூடுதல் கழிவுத் தொகையை அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது. இந்த பயனீட்டாளர்கள் ஜூலை தொடங்கி செப்டம்பர் வரை மின்சார பில்களுக்கு 10 விழுக்காடு கழிவுத் தொகையைப் பெறுவார்கள். ஏப்டல் தொடங்கி வழங்கப்பட்ட 2 விழுக்காடு கழிவுத் தொகையில் இருந்து இந்தக் கழிவுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தக் கழிவுத் தொகை மூலம் 916,000 அல்லது 12 விழுக்காட்டுப் பயனீட்டாளர்கள் பலன் அடைவார்கள். பந்துவான் பிரிஹாத்தின் எலக்ட்ரிக் உதவித் திட்டத்திற்காக 942 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்பட்டது என்று ஷம்சுல் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here