கோலாலம்பூர்:
இஸ்ரேல் நாடு வழங்கும் பயண ஆவணங்கள் (Travel Documents/Passports) மலேசியாவிற்குள் நுழைவதற்கு அங்கீகரிக்கப்பட மாட்டாது என்று உள்துறை அமைச்சு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுடன் மலேசியா எவ்வித தூதரக உறவையும் வைத்திருக்கவில்லை என்ற அரசின் கொள்கைக்கு ஏற்ப இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலஸ்தீன மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் கொண்டுள்ள உறுதியான நிலைப்ப்பாட்டிற்குத் தன் முழு ஆதரவைத் தெரிவித்துள்ள உள்துறை அமைச்சு, நாட்டின் எல்லைப் பாதுகாப்பு எவ்விதச் சமரசமுமின்றி பலப்படுத்தப்படும் எனக் கூறியுள்ளது.
மலேசியக் குடிநுழைவுச் சட்டம், பாஸ்போர்ட் சட்டம் மற்றும் தேசியப் பாதுகாப்பு நிறுவனங்களின் வழிகாட்டுதல்களின்படி வெளிநாட்டினரின் வருகை தீவிரமாகத் தணிக்கை செய்யப்படும்.
மலேசியாவிற்குள் நுழைய முனையும் அனைத்து வெளிநாட்டினரின் விண்ணப்பங்களும் குடிவரவுத் தணிக்கை, பாதுகாப்புச் சோதனைகள் மற்றும் அபாய மதிப்பீட்டிற்கு (Risk Assessment) உட்படுத்தப்படும்.தடைசெய்யப்பட்ட நபர்கள்: நாட்டின் பாதுகாப்பு, பொது அமைதி அல்லது தேசிய நலன்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் நபர்கள் அல்லது குடிவரவுச் சட்டப் பிரிவு 8-ன் கீழ் ‘தடைசெய்யப்பட்ட குடியேறிகள்’ (Prohibited Immigrants) பட்டியலில் வரும் எவரும் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்; மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது.






















