என் அப்பாவே என் இதய தெய்வம்

என் அப்பா பி.ஆர்.பொன்னுசாமி எங்கள் வீட்டு எஜமான். அவரே எங்களின் இதய தெய்வம். சொந்த உழைப்பால் உயர்ந்த உன்னத மனிதர்.

சொந்த தொழில் செய்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற வேட்கையில் வாழ்ந்த அவர், தனது பிள்ளைகளும் சொந்தத் தொழில் செய்து முன்னேற வேண்டும் என்ற அறிவுரையை அடிக்கடி வலியுறுத்தி வந்தார்.

ஷா ஆலமில் வாழ்ந்தபோது சிறிது காலம் தொழிற்சாலையில் வேலை செய்தாலும் எனக்கு விவரம் தெரிந்ததிலிருந்து சொந்தத் தொழில் செய்வதில் ஆர்வம் காட்டி வந்தார். ஷா ஆலம் வட்டாரத்தில் பந்தல் போடும் தொழிலை முதன் முறையாகத் தொடங்கிய இந்தியர் என்ற பெருமை என் தந்தை பொன்னுசாமிக்கே உண்டு.

பின்னர் பசார் மாலாம் சுத்தம் செய்வது, புல் வெட்டுவது போன்ற தொழில்களை குத்தகை அடிப்படையில் செய்து வந்தவர், பிறகு பந்திங் பகுதிக்கு மாற்றலாகி வந்ததும் அந்தத் தொழில்களைத் தொடர்ந்து செய்து வந்தார்.

பின்னாளில், ஒரு சிறிய அளவிலான உணவகத்தை ஆரம்பித்து அம்மா விமலாவுடன் சேர்ந்து நடத்தி வந்தார். அதேவேளையில், நான் சொந்தத் தொழில் கற்பதற்கும் பெரும் உதவியாக இருந்து வந்தார். அவரின் ஊக்குவிப்பில் இந்தியா வரைச் சென்று முக ஒப்பனைக் கலையை முறையாகப் பயில்வதற்கு உறுதுணையாக இருந்தார்.

நான் சொந்தமாக அழகு நிலையம் திறப்பதற்கும் என் அப்பாவின் தூண்டுதல் தான் முக்கிய காரணமாக இருந்தது. என் உடன் பிறப்புகளும் சொந்தத் தொழில் செய்வதற்கு ஆதரவு வழங்கி வந்தார்.

இன்று அவர் எங்களை விட்டுப் பிரிந்து ஆண்டுகள் இரண்டு ஆனாலும் அவரின் நினைவுகளும் உற்சாகமான வார்த்தைகளும் எங்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளதை என்றும் மறக்க முடியாது. அவர் இல்லாத நிலையிலும் என் தாயார் சொந்தக் காலில் நின்று வாழ்க்கையை நடத்துவதற்கு அவர் ஆரம்பித்துக் கொடுத்த அந்த சிறிய உணவகம்தான் கைகொடுக்கிறது.

இந்த இனிய தந்தையர் தினத்தில் அவரை நினைவு கொள்வதில் எங்கள் குடும்பத்திற்குப் பெருமையாக உள்ளது.

பொ.சுஜாதா, கிள்ளான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here